தேசிய பாதுகாப்புக்கு தேவையான விடயங்களில் பொலிஸாருக்கு உதவுமாறு கோரிக்கை

Report Print Kumar in சமூகம்

தேசிய பாதுகாப்புக்கு தேவையான விடயங்களில் பொது அமைப்புகள் பொலிஸாருக்கு உதவ வேண்டும் என கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் கபில ஜயசேகர தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச பொலிஸ் ஆலோசனைசபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இன்று காலை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.எஸ்.மெண்டிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் கபில ஜயசேகர கலந்து கொண்டார்.

இதில் மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் சி.சந்திரபால, மட்டக்களப்பு மாவட்டத்தில் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 12 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் முக்கிய பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இயங்கும் பிரதேச பொலிஸ் ஆலோசனை சபை உறுப்பினர்கள், மூன்று மதங்களின் தலைவர்கள், சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு பொதுமக்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்வது பொலிஸார் மற்றும் பொதுமக்களின் நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டது.

பொதுமக்களின் பாதுப்பு தொடர்பான விடயங்களில் எதிர்காலத்தில் பொதுமக்களின் பங்களிப்பினை அதிகமாக பெற்றுக்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அண்மையில் வவுணதீவில் இடம்பெற்ற பொலிஸாரின் படுகொலைக்கு இங்கு பொது அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் அது தொடர்பான விசாரணைகளுக்கு முழுமையான ஆதரவினை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

பொது அமைப்புகளும் பொலிஸ் ஆலோசனை உறுப்பினர்களும் விழிப்பாக இருக்கும்போது குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு உதவமுடியும் எனவும் கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் கபில ஜயசேகர தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த நாடு எதிர்கொண்ட விளைவுகளை அனைவரும் அறிவார்கள்.

அவ்வாறான விடயங்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். தேசிய பாதுகாப்புக்கு தேவையான விடயங்களில் பொது அமைப்புகள் பொலிஸாருக்கு உதவவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Latest Offers