நல்லாட்சி அரசு தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை: பிரபா கணேசன்

Report Print Ashik in சமூகம்

நல்லாட்சி என கூறிக்கொள்ளும் இந்த அரசு தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை என ஜனநாயக மக்கள் காங்கிரசின் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் காங்கிரசின் மன்னார் மாவட்டக் காரியாலயம் புதிய மூர் வீதியில் இன்று மதியம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த அலுவலகத்தை ஜனநாயக மக்கள் காங்கிரசின் தலைவர் பிரபா கணேசன் வைபவ ரீதியாக திறந்து வைத்த பின் மக்கள் மத்தியில் உரை நிகழ்த்துகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரை நிகழ்த்துகையில்,

நல்லாட்சி என கூறிக்கொள்ளும் அரசு தமிழ் மக்களுக்கு எதனை செய்துள்ளது? அந்த ஆட்சி எங்கே போனது?அரசியல் அமைப்பை மாற்றித் தருகின்றோம், சமஸ்டியை தருகின்றோம், வடக்கு, கிழக்கை இணைக்கின்றோம் , அரசியல் கைதிகளை விடுதலை செய்கின்றோம் , காணாமல் போனவர்களை கண்டு பிடித்துத்தருகின்றோம் என்றார்கள். ஆனால் ஒன்றுமே செய்யவில்லை. எதுவும் நடக்கவும் இல்லை.

எல்லாம் ஊழல்களாக நடந்து முடிந்துள்ளது. இந்த நல்லாட்சி வந்து மூன்று வருடங்களில் மத்திய வங்கியில் இருந்து 12 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஸவாக இருந்தாலும் சரி, ரணில் விக்ரமசிங்கவாக இருந்தாலும் சரி, மைத்திரிபால சிறிசேனவாக இருந்தாலும் சரி இவர்கள் யாரும் தமிழ் மக்களுக்கு சும்மா ஒன்றையும் கொடுக்க மாட்டார்கள்.

இவர்கள் எல்லோரையும் இன வாதியாகவே நான் பார்க்கின்றேன். யாரும் தமிழர்களுக்கு எதனையும் செய்ய மாட்டார்கள். ஆனால் என்னால் முடிந்தவற்றை செய்ய முடியும். ஜனாதிபதியாக இருந்தாலும் சரி,பிரதமராக இருந்தாலும் சரி அவர்களிடம் இருந்து பறித்துக்கொண்டு வந்து தமிழ் மக்களுக்கு கொடுக்கக்கூடிய தகுதி என்னிடம் உள்ளது.

வன்னி மாவட்டத்தை பொருத்த மட்டில் றிஸாட் பதியுதீன்,காதர் மஸ்தான் போன்றவர்கள் மத்திய அரசாங்கத்திடம் இருந்து சகல விதமான உதவிகளையும் பெற்றுக்கொண்டு அவர்களுடைய சமூகம் சார்ந்தவர்களுக்கு வழங்குகின்றார்கள்.

எமது வாக்குகளை பெற்றும் இந்த வன்னி மண்ணை ஆண்டு கொண்டிருப்பவர்கள் அந்த அமைச்சர்களே. ஆனால் வன்னியில் தமிழ் மக்களின் வாக்களினால் வெற்றி பெறுபவர்கள் அந்த அமைச்சர்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உங்களிடம் வாக்கு கேட்கின்றார்கள்.ஆனால் நீங்கள் வாக்களிக்கின்றீர்கள்.

அவர்கள் எதுவும் செய்வதில்லை. அவர்கள் அபிவிருத்தி செய்து தருகின்றோம் என்று உங்களிடம் வாக்கு கேட்கவில்லை. உரிமையை பெற்று தருகின்றோம் என்று தான் வாக்கு கோட்டார்கள்.

பல வருடங்கள் போனாலும் பரவாயில்லை அவர்கள் உரிமையை பெற்று தரட்டும். ஆனால் எமது மக்களுக்கு அடிப்படையாக அபிவிருத்தி தேவைப்படுகின்றது. அதனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் ஜனநாயக மக்கள் காங்கிரசின் பிரதி நிதிகள், ஆதரவாளர்கள்,பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Latest Offers