மாணவர்களுக்கு இலவச சீருடைத் துணி வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள்!

Report Print Suman Suman in சமூகம்
80Shares

பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை துணிகள் வழங்கப்படாமையினால் கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 81 பாடசாலைகளில் சுமார் 32,755 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்களின் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் வறுமைக் கோட்டிற்கு உட்பட்டவர்கள்.

இந்த மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் பாடசாலை சீருடைக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற இலவச சீருடைத்துணிகளை நம்பியே இருக்கின்றனர்.

இந்த நிலையில் இவ்வருடத்திற்கான இலவச சீருடைத்துணிகள் வழங்கப்படாமையினால் புதிய சீருடைகளை தைத்துக்கொள்வதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

வழமையாக இலவச சீருடைத் துணிகள் வழங்கப்பட்டாலும் பெரும்பாலான மாணவர்கள் புதிய சீருடைகளை தைத்துக்கொள்வதற்கு கூட பணம் இன்றி சிரமப்படுவர்.

எனவே இவ்வருடம் இதுவரைக்கும் சீருடைத்துணிகளே வழங்கப்படவில்லை. எப்போது வழங்கப்படும் என்றும் எந்தவிதமான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என கல்வித்திணைக்கள அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இலவச சீருடை வழங்கப்படாமைக்கு எதிரிப்புத் தெரிவித்து கிளிநொச்சி நகரின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்படப்பட்டுள்ளன.