இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 13 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும்!

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

கிழக்கு மாகாணத்தில், திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளில் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த 13 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன.

கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவினால் திருகோணமலை மாவட்டத்தில் இராணுவ பாதுகாப்பு வலயங்களாக இருந்த 13ஏக்கர் காணிகள், மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பக்குமார அவர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதற்கமைவாக குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 237 சீ கிராம சேவையாளர் பிரிவில் உள்ள கட்டுக்குளம் பகுதியில் 5 ஏக்கர் காணிகளும் சேருநுவர பிரதேச செயலகத்திற்குட்பட்ட 218 கிராம சேவையாளர் பிரிவில் கங்குவேலி பகுதியில் 1.75 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதுடன் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 216 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள தோப்பூர் பகுதியில் 2.5 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளது.

இதே நேரம் கந்தளாய், சூரிய புற மற்றும் 219 பீ கிராம சேவையாளர் பிரிவில் உள்ள பாட்டாளிபுரம் பகுதியில் 2 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என இராணுவ உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

காணிகளை கையளிப்பதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலக வளாகத்தில் நாளை பகல் 1.00 மணிக்கு நடைபெறவுள்ளது.