மட்டக்களப்பில் ஹோட்டல்களின் அனுமதிகள் இரத்து செய்யப்படும்! வெளியானது எச்சரிக்கை...

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சீ மற்றும் டி சான்றிதழ்களைப் பெற்ற ஹோட்டல்கள் ஏ மற்றும் பீ சான்றிதல்களை ஒரு மாதகாலத்திற்குள் பெற்றுக்கொள்ளாது விட்டால் அந்த ஹோட்டல்களின் அனுமதிகள் இரத்து செய்யப்படும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல் சோதனை செய்யப்பட்டு தரச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் கே.சித்திரவேல் தலைமையில் இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு தரச்சான்றிதழ்களை வழங்கிவைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதார குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை மட்டக்களப்பு மாநகரசபை பகுதியில் இயங்கும் சிற்றுண்டிச்சாலைகள், உணவகங்கள் 80க்கான தரச்சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.

ஏ தரத்திலான 15 ஹோட்டல்களும் பி தரத்திலான 23 ஹோட்டல்கள், சீ தரத்திலான 40 ஹோட்டல்கள், டி தரத்திலான 02 ஹோட்டல்களுக்கு தரச்சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இதன்போது மாநகர முதல்வர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு நகருக்கு பெருமளவான மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். அவர்கள் தங்களுக்கான உணவினைப் பெற்றுக்கொள்ளும் போது சுத்தமான உணவு வழங்கப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

அதனடிப்படையில் மாநகர சுகாதார பிரிவினரால் ஆய்வு செய்யப்பட்டு இந்த தரச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. குறித்த தரச்சான்றிதழ்கள் ஹோட்டல்களில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

அவ்வாறு செய்யாத உணவகங்களின் அனுமதிகள் இரத்துச் செய்யப்படும். பொதுமக்கள் தரமான உணவுகளையும் சுத்தமான உணவுகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் மாநகரசபை உறுதியாகவுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபைக்குள் உள்ள ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் இறைச்சிகள் வெளியில் இருந்து கொண்டு வரப்படுவதாக தெரியவருகின்றது.

75வீதத்திற்கும் மேற்பட்ட இறைச்சி மாநகரசபைக்கு வெளியில் இருந்துவருவதாக தெரியவருகின்றது. வெளியில் இருந்துவரும் இறைச்சியை நாங்கள் உறுதிப்படுத்த முடியாத நிலையிருக்கின்றது.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வெட்டப்படும் இறைச்சிகள் எமது சுகாதார பிரிவினரால் உறுதிப்படுத்தப்படுகின்றது. வெளியில் இருந்து வரும் இறைச்சிகளை யாரும் உறுதிப்படுத்த முடியாது.

எனவே இறைச்சிகளை வெளியில் இருந்து கொண்டு வருவதும் நிறுத்தப்பட்டு மட்டக்களப்பு மாநகரசபைக்குள்ளேயே அவற்றினை பெற்றுக் கொள்ள வேண்டும். மட்டக்களப்பு மாநகரசபையின் சட்டதிட்டங்களை மதித்து செயற்பட வேண்டும்.

42 ஹோட்டல்கள் தங்களது சுகாதார நிலமைகள் தொடர்பில் விரைவில் உறுதிப்படுத்த வேண்டும்.

அது தொடர்பில் எமது சுகாதார பிரிவு மீண்டும் ஆய்வு செய்யும். தங்களை மீளபுனரமைக்காத ஹோட்டல்களின் அனுமதி இரத்துச் செய்யப்படும்.

மட்டக்களப்பு மாநகருக்குள் இயங்கும் ஹோட்டல்கள் தங்களது இலாபத்தினை மட்டும் நோக்காக கொண்டு செயற்படாது சமூக பொறுப்புடனான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாநகருக்கு பெருமளவான மக்கள் தினமும் வந்து செல்வதனால் குடிநீர் உட்பட பல்வேறு தேவைப்பாடுகளை நிறைவேற்ற வேண்டிய தேவையுள்ளது.

சிலர் நாங்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இரண்டு இடங்களில் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதற்கு உதவியுள்ளனர். அவர்களுக்கு நன்றியை தெரிவிப்பதுடன் ஏனையவர்களும் தங்களது சமூக பொறுப்பினை வெளிப்படுத்த வேண்டும்.

மட்டக்களப்பு மாநகரை கண்காணிப்பு கமரா மூலம் கண்காணிக்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கு மட்டக்களப்பு வர்த்தக சங்கம் உதவியளித்துள்ளது.அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதுடன் விரைவில் மட்டக்களப்பு நகரம் முழுவதும் கண்காணிப்பு கமராக்கள் மூலம் கண்காணிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.