காரைதீவின் தென்கோடிப்பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

காரைதீவின் தென்கோடிப்பிரதேசம் மழைவெள்ளத்தில் முற்றாக மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்துள்ளார்.

11ஆம் 12ஆம் பிரிவுகள் நேற்றுப் பெய்த அடைமழையால் தாழும் அபாயமுள்ளதாக பிரதேசசபை உறுப்பினர் மு.காண்டீபன் தவிசாளரிடம் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், தவிசாளர் கே.ஜெயசிறில், உறுப்பினர்களான த.மோகனதாஸ் எஸ்.ஜெயராணி ஆகியோர் பணியாளர்களுடன் அவ்விடத்திற்கு விரைந்து சிரமதான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ஜெயசிறில்,

காரைதீவு 11ஆம் 12ஆம் 1 ஆம் பிரிவுகள் முற்றாகவும், 6ஆம் 7ஆம் 9ஆம் 10ஆம்பிரிவுகள் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடருமானால் சில பகுதிகளிலிருந்து மக்கள் இடம்பெயர நேரிடும் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, அவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட வேண்டும். காரைதீவு 2ஆம் பிரிவில் நேற்று வீசிய கடும் காற்றினால் பாரிய பலாமரமொன்று முறிந்து வீழ்ந்ததில் வீதிப்போக்குவரத்து மற்றும் மின்சாரம் போன்றன முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த அவலநிலை தொடருமானால் பொதுமக்கள் பொதுச் சந்தைக் கட்டடத்திற்கு வருமாறும் தவிசாளர் ஜெயசிறில் அவசர அழைப்பை விடுத்துள்ளார்.