மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இடம்பெற்ற நடைபவணிகள்

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

யாழ்ப்பாணத்தில் பன்னாட்டு மனித உரிமைகள் தினமான இன்று அடையாள நடைபவணி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மனித உரிமைகள் முதலுதவிச் சங்கத்தினர், இலங்கை சமாதானப் பேரவையுடன் இணைந்து பன்னாட்டு மனித உரிமைகள் தினத்தில் யாழ்ப்பாணம் நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்விற்கு யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட், யாழ். பிராந்திய மனித உரிமைக்குழு ஆணையாளர் ரி.கனகராஜ், பேராசிரியர் ம.பெ.மூக்கையா, பொலிஸ் அத்தியட்சகர் பி.யு.உடுகம, இலங்கை ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத் தலைவி சி.சூரியகுமாரி ஆகியோர் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது அழைக்கப்பட்ட விருந்தினர்களுடன் நல்லூர் ஆலய முன்றலில் இருந்து மனித உரிமையை பிரகடனப்படுத்தும் பதாகைகளை தாங்கியவாறு ஊர்வலகமாக வந்து துர்க்காதேவி மண்டபத்திற்குச் சென்று நிகழ்வினை ஆரம்பித்துள்ளனர்.


முல்லைத்தீவு

முல்லைத்தீவில் சர்வதேச மனித உரிமைகள் நாளான இன்று வடக்கில் உள்ள ஐந்து மாவட்டத்தினை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டுவரும் வேளையில் சர்வதேச மனித உரிமைகள் நாளான இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒன்று திரண்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.

முல்லைத்தீவு நகரில் உள்ள இராயப்பர் தேவாலயத்தின் முன்றலில் இருந்து ஆரம்பமான இந்த பேரணி முல்லைத்தீவு மாவட்டச்செயலகம் முன் சென்றடைந்துள்ளது.

இதன்போது வேண்டும் வேண்டும் நீதிவேண்டும், சர்வதேசமே பதில்கூறு, சிறைகளில் வாடும் எமது உறவுகளுக்கு நீதிவேண்டும், சர்வதேசமே திரும்பிப்பார், ஆட்சிக்கு அடிபடும் அரசு எமக்கு என்ன பதில்கூறும் என்ற வாசகங்கள் எழுதிய பாதாகைகளை தாங்கியவாறு கோசங்களை எழுப்பி காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஐக்கியநாடுகள் சபையின் அலுவலகத்திற்கான வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்கள்.

இந்த வேண்டுகோளினை முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்வர்களின் சங்க தலைவி ம.ஈஸ்வரி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி கனகரஞ்சினியிடம் விடுத்துள்ளனர். ஐ.நா அலுவலகத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல்: யது, விஸ்வா

மன்னார்

மன்னார் மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களை மேம்படுத்தும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மனித உரிமைகள் தினம் மன்னாரில் நினைவு கூரப்பட்டுள்ளது.

மன்னார் நகர மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் அருட்தந்தை நேரு அடிகளார், அகில இலங்கை தமிழ் காங்கிரசின் செயலாளர் செல்வராசா கஜன், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் மற்றும் சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவுகள், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்: ஆசிக்

வவுனியா

வவுனியாவில் காணாமற்போன உறவுகளின் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த போராட்டம் இன்று பிற்பகல் 1 மணியளவில் குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் பேரணியாக குடியிருப்பு பாடசாலை வீதி வழியாக வைத்தியசாலை சந்திக்குச் சென்று தமது போராட்ட களத்தினை வந்தடைந்து.

ஜனநாயகத்தை ஊக்குவிப்பதற்கான வாக்கெடுப்பு எனப் பொறிக்கப்பட்ட பதாதையுடன் வவுனியாவில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டம் மேற்கொண்டு வரும் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் உறவுகள் இன்றைய போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.

இன்றைய போராட்டத்தில் பெருமளவான தாய்மார்கள் கலந்துகொண்டதுடன் குடியிருப்பு பிள்ளையார் ஆலய வழிபாடுகளின் பின்னர் தேங்காய் உடைத்து வழிபட்டு பாடசாலை வீதி வழியாக வைத்தியசாலை சந்தி சென்று அங்கிருந்து தமது போராட்ட களத்திற்கு சென்றுள்ளனர்.

மேலதிக தகவல்: சதீஸ்

Latest Offers

loading...