பழைய பேருந்து நிலையத்தில் தனியார் சேவைகள் இடம்பெறவில்லை

Report Print Theesan in சமூகம்

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வந்து செல்வதற்கு வடமாகாண ஆளுநரால் அனுமதியளிக்கப்பட்ட போதும் தனியார் பேருந்துச் சேவைகள் மேற்கொள்வதற்கு தயக்கம் காட்டிவருகின்றன.

இதனால் பலரின் முயற்சியினால் பழைய பேருந்து நிலையத்தில் சேவைகள் மேற்கொள்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இழுத்தடிப்பு செய்து வருகின்றதுடன் பல காரணங்களையும் தெரிவித்து வருகின்றதால் அசௌகரியங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஒரு வருடமாக பழைய பேருந்து நிலையம் முன்னாள் வடமாகாண முதலமைச்சரின் உத்தரவிற்கு அமைய இழுத்து மூடப்பட்டுள்ளதுடன் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினால் புதிய பேருந்து நிலையத்தில் சேவைகள் மேற்கொள்வதற்கு ஆதரவான பல போராட்டங்கள் பணிப்புறக்கணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு பயணிகளுக்கும் அசௌகரியங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதையடுத்து புதிய பேருந்து நிலையத்தில் கடந்த ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அனைத்து பேருந்துச் சேவைகளும் இடம்பெற்று வருகின்றன.

தற்போது பலரின் முயற்சிகளுக்கு பின்னர் கடந்த 7ஆம் திகதி வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து பழைய பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் இ.போ.ச பேருந்துகளும் தரித்துச் செல்வதற்கு கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டு அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்கள் வரையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தமது பேருந்துகளை பழைய பேருந்து நிலையத்தில் சேவைகள் மேற்கொள்வதற்கு தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இ.போ.ச பேருந்துகள் தமது சேவையை மேற்கொண்டு வருகின்ற நிலையில் தனியார் பேருந்துகள் சேவைகள் மேற்கொள்ள பின்னடித்துள்ளனர்.

இவ்விடம் குறித்து தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தலைவர் இ.இராஸேஸ்வரனிடம் தொடர்புகொண்டு வினவியபோது,

இது குறித்து நீங்கள் அதிகார சபையினரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறும் நாங்கள் பழைய பேருந்து நிலையத்திற்குச் சென்று வருவதற்கு பேருந்துகளுக்கு அனுமதி வழங்கியுள்ளோம்.

வழித்தடை அனுமதி வழங்கும் வீதிப் பணிகள் போக்குவரத்து அதிகார சபையினருடன் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஒரு வழிப்பயணத்திலிருந்து வேறு ஒரு வழிப்பயணம் மேற்கொள்வதற்கே வழித்தடை அனுமதி பெறப்படவேண்டியது அவசியம் பழைய பேருந்து நிலையத்திற்கு சென்று வருவதற்கு வீதிப் போக்குவரத்து அதிகாரசபையினரிடம் அனுமதி பெறத்தேவை ஏற்படாது என்று சாரதிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கடந்த 7ஆம் திகதி வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தலைவர் இவ்விடயத்தை ஏன் ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டுவரவில்லை என்ற கேள்வியையும் எம்மத்தியில் எழுப்பியுள்ளது. அன்றைய தினம் அங்கு மௌனம் காத்துவிட்டு தற்போது காரணம் கூறுவது நியாயமற்றது.

Latest Offers