வவுனியாவில் பொது குழாய்க் கிணற்றை ஆக்கிரமித்து வர்த்தக நிலையம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் நகரசபைக்கு சொந்தமான பொது குழாய் கிணற்றை ஆக்கிரமித்து வர்த்தக நிலையமொன்று அமைக்கப்பட்டுள்ளது தொடர்பில் வரியிறுப்பாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இவ் விடயம் தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா சந்தை சுற்று வட்டத்தில் நீண்ட காலமாக நகரசபையின் பொது குழாய் கிணறு காணப்பட்டது. எனினும் அது கடந்த சில ஆண்டுகளாக அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தினால் கசியும் எண்ணை குழாய்க் கிணற்றில் கலப்பதாக தெரிவித்து பயன்பாடு இன்றி காணப்பட்டது.

இந் நிலையில் குறித்த குழாய்க் கிணற்றினை நகரசபையும் கவனத்தில் கொள்ளாத நிலையில் அதனை மூடி தனி நபரொருவர் சிறிய வியாபார முயற்சியில் ஈடுபட்டு வந்திருந்தார்.

எனினும் அண்மையில் குறித்த குழாய் கிணற்றிற்கு பின்புறமாக உள்ள வர்த்தக நிலையத்தினர் தமது வர்த்தக நிலையத்தினை விஸ்தரித்திருந்த நிலையில் குறித்த குழாய்க் கிணற்றினையும் தமது ஆளுகைக்குட்படுத்தி வர்த்தக நிலையத்தினை அமைத்துள்ளனர்.

அத்துடன் குறித்த வர்த்தக நிலையத்தினை வவுனியா நகரசபையின் உப நகரபிதாவே திறந்து வைத்திருந்தார்.

இந் நிலையில் குழாய்க் கிணறு திருத்தம் செய்யப்படாமல் காணப்பட்டு வந்ததுடன் இது தொடர்பில் நகரசபையினரும் அக்கறையின்றி இருக்கின்றனர்.

எனவே குறித்த குழாய்க் கிணற்றினுள் எரிபொருள் வருவதாக இருந்தால் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு நகரசபை முன்னிற்க வேண்டும் என்பதுடன் குழாய்க் கிணற்றினை புனரமைப்பு செய்து சந்தை சுற்றுவட்ட வீதியில் உள்ள வர்த்தகர்களின் பயன்பாட்டுக்கு விட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இந் நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக வவுனியா நகரபிதா இ. கௌதமனிடம் கேட்டபோது,

குறித்த குழாய்க் கிணற்றில் அருகாமையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து எண்ணை கசிந்து வருவதனால் பயன்படுத்த முடியாதுள்ளதாக தெரிவித்தனர்.

எனவே குறித்த குழாய்க் கிணற்றில் இருந்து நீரைப்பெற்று பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளோம். பரிசோதனை அறிக்கை வந்ததும் இவ்விடயம் தொடர்பாக தெரியப்படுத்தப்படும் என்றார்.

Latest Offers