ஆட்கொணர்வு வழக்கிற்கு நீதிமன்றத்திற்கு சென்ற அனந்தி கூறிய கருத்து

Report Print Thileepan Thileepan in சமூகம்

காணாமல் போனவர்கள் மற்றும் சரணடைந்தவர்கள் தொடர்பில் எங்களுக்கு ஒரு நியாயம் கிடைக்கும் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

எழிலன் (சசிதரன்) உட்பட சரண்டைந்தவர்களின் ஆட்கொணர்வு வழக்கிற்காக இன்று வவுனியா நீதிமன்றத்திற்கு வருகை தந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “இன்றைய தினம் எங்களது ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு வவுனியா நீதிமன்றத்தில் நடைபெற்றது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ம் திகதி வழக்கு விசாரணைக்காக எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சர்வதேச மனித உரிமை தினம்.

இந்த நாட்டில் தமிழர்களாகவே பிறந்தமைக்காவே கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு அடிமை வாழ்க்கைக்கு தள்ளப்பட்டிருக்கின்ற நிலையில் மன்னார் புதைகுழியில் மிகவும் வேதனையளிக்கக் கூடிய வகையில் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

இரும்பு கம்பியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் தாயும் குழந்தையுமாக பல எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டது.

எல்லாமே ஆடைகள் எதுவுமில்லாமல் மிகவும் அநாகரீகமாக புதைக்கப்பட்டவை. இவற்றை ஒரு மனிதப் படுகொலையாக பார்க்கின்றோம்.

இன்று சகல நாடுகளும் மனித உரிமைகள் தினத்தை அனுஸ்டிக்கும் நாள். ஆனால் எங்களது மண்ணில் மட்டும் மனித உரிமை மீறல், அநியாயங்கள் எல்லாம் நடக்கின்ற போது எங்களுடைய தலைமைகள் கூட மனித உரிமைகள் தொடர்பாக இடித்துரைக்க முடியாதவர்களாக அல்லது பொறுப்பு கூற செய்ய முடியாதவர்களாக இருக்கின்ற நிலையில் வருத்தத்துடன் இன்றைய தினத்தை அனுஸ்டிக்கின்றோம்.

ஆனால், இராணுவத்தினரிடம் ஓப்படைக்கப்பட்டவர்கள் தொடர்பாக 10 வருடங்கள் ஆகியும் நாங்கள் எதனையும் கண்டு கொள்ளாத நிலையில் அரசு காணாமல் போனோர் அலுவலகம் என்ற ஒன்றை கொண்டு வந்துள்ளது.

அதில் எந்தளவிற்கு செயற்பாடுகள் நடக்கின்றதோ இல்லையோ ஆனால் அந்த குழுவின் தலைவராக பிரபல சட்டத்தரணி எங்களுடைய சாலிய பீரிஸ் அவர்கள் இருக்கின்றார்கள்.

அவருக்கு எல்லா மக்கள் மத்தியிலும் நல்ல பெயர் இருக்கிறது. அந்த பெயரை தக்க வைத்துக் கொள்வதற்காக அவர் நிச்சயமாக காத்திரமான தீர்வை எட்டித் தருவார் என நாங்கள் நம்புகின்றோம்.

அரசியலுக்கு அப்பால் அவர் மனிதவுரிமைகள் தொடர்பில் அக்கறையும், கரிசனையும் கொண்டவர். அதுமட்டுமல்ல சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியிலும் மதிப்புக்குரியவர்.

அந்த வகையில் காணாமல் போனவர்கள், சரணடைந்தார்கள் தொடர்பாக எங்களுக்கு ஒரு நியாயம் கிடைக்கும் என நாங்கள் நம்புகின்றோம்.

போருக்கு பின்னர் 10வது ஆண்டு மனிதவுரிமைகள் தினத்தை நாங்கள் கொண்டாடுகின்றோம். ஆனால் இனவழிப்பு தொடர்பான பொறுப்பு கூறலை அரசாங்கம் செய்யாதவிடத்து, இதை தடுப்பதற்கான எந்தவொரு வழியும் காணப்படவில்லை.

தொடர்ந்தும் நாங்கள் கொல்லப்படலாம். காணாமல் ஆக்கப்படலாம். அந்தவகையில் இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தான் நாங்கள் இலங்கை அரசாங்கத்தை பொறுப்பு கூற வலியுறுத்துகின்றோம்.

தெற்கில் இருக்கின்ற இந்த ஆட்சிக் குழப்ப நிலையில் எங்களுக்கான நியாயம் கிடைக்க வேண்டும். சர்வதேச விசாரணை நடக்க வேண்டும் என்ற அழுத்தத்துடன், எங்களுக்கான ஒரு தீர்வு கிடைக்க கடுமையாக முயற்சிக்க வேண்டும் என்றார்.

Latest Offers