மட்டக்களப்பில் தனியார் வகுப்புகளுக்கு தடை!

Report Print Dias Dias in சமூகம்

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் எதிர்வரும் 02 வாரங்களுக்கு தனியார் வகுப்புகளுக்கு தடை செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற 10வது அமர்வில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் இன்று முதல் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தற்பொழுது பாடசாலைகள் அனைத்தும் விடுமுறையில் இருக்கின்றன. ஆனால், எங்களது தனியார் வகுப்புக்களுக்கான ஆசிரியர்கள் உடனே வகுப்புக்களை ஆரம்பித்து விட்டார்கள்.

பாடசாலை மாணவர்களுக்கு எதுவிதமான ஒரு பொழுது போக்குகளும் இல்லை.

எனவே, உயர்தர மாணவர்கள் மற்றும் புலமைப்பரிசில் மாணவர்கள் தவிர்ந்த அனைத்து தனியார் வகுப்புக்களும் நிறுத்தப்பட வேண்டும் என்று ஒரு தீர்மானத்தினை நிறைவேற்றி, உரிய சட்ட ஏற்பாடுகளின் ஊடாக ஆணையாளர் அந்த தீர்மானத்தினை அமுல்படுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முதல்வர் முன்மொழிந்த தனியார் வகுப்புக்கள் தொடர்பிலான பிரேரணை குறித்து மாநகர சபை உறுப்பினர் குமாரசாமி காந்தராஜா கருத்துத் தெரிவிக்கையில்,

தற்போது, சாதாரண தர பரீட்சை நடந்து கொண்டு இருக்கின்றது. இந்த நேரத்தில் பொது மைதானங்களில் இரவு வேளைகளில் 09.00 – 10.00 மணி வரைக்கும் நிகழ்சிகள் அரங்கேறுகின்றன.

எங்களுடைய பிரதேசத்தில் ஒரு கிருஸ்தவ சபை ஒன்று சென்ற வாரம் இரவு 10.00 – 11.00 மணி வரைக்கும் நடைபெருகின்றது. இதற்கு அனுமதி வழங்குவது யார்?

தயவு செய்து இந்த பரீட்சை நடைபெருகின்ற காலத்தில் எந்த சமய நிகழ்சியோ அல்லது எந்த கலை நிகழ்ச்சியோ நேரம் கடந்த அனுமதியினை வழங்கக் கூடாது என்பதனை மாநகர சபையும் கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும் என்று மாநகர சபை உறுப்பினர் குமாரசாமி காந்தராஜா குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers