காணி விற்பனைக்கு இருப்பதாக தெரிவித்து மோசடியில் ஈடுபட்ட இளைஞர்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காணியொன்று விற்பனைக்கு இருப்பதாக தெரிவித்து மோசடியில் ஈடுபட்ட இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் முகநூல் ஊடாக கண்டுபிடிக்கப்பட்டு நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வத்தளை, கொங்கிகொட பகுதியை சேர்ந்த தேவா கொஸ்வத்தகே தரங்க பிரசாத் குணசேகர (40 வயது) என்பவரை காணி ஒன்று இருப்பதாக திருகோணமலைக்கு வரவழைத்து அரசுக்கு சொந்தமான காணியை காண்பித்துள்ளார் சந்தேகநபர்.

அத்துடன் ஆறு இலட்சத்து ஐம்பதாயிரம் முன் காசு கொடுக்க வேண்டி உள்ளதாகவும், அப்பணத்தை எடுத்து வருமாறு கைது செய்யப்பட்ட இளைஞர் கூறியதாகவும் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அப்பணத்தை காரில் கொண்டு வந்த போது காரிலிருந்து பணத்தை களவாடி சென்றுள்ளதாகவும், களவாடியவர் பற்றிய விபரங்கள் தெரியாது எனவும் பொலிஸ் நிலைய முறைபாட்டில் பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது முகநூல் ஊடாக முறைப்பாட்டாளருக்கு சந்தேகநபரின் புகைப்படம் காண்பிக்கப்பட்டு மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் திருகோணமலை, ஆனந்தபுரி பகுதியை சேர்ந்த சவுந்தரராஜா விதுர்ஷன் (19வயது) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விசாரணை செய்தபோது ஆறு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை திருடியதாகவும், அப்பணத்தை தனது சக நண்பரிடம் கொடுத்துள்ளதாகவும் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அதேநேரம் தற்போது அவரது நண்பர் பணத்தை கொடுத்துவிட்டு தலைமறைவாகியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்றையதினம் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.