பொதுச் சந்தை நிர்மாணிப்பு பணிகள் தொடர்பாக கள விஜயம்

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு - ஏறாவூர் நவீன பொதுச் சந்தை நிர்மாணிப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்வதற்காக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் மற்றும் இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபன அதிகாரிகள் நேரடி கள விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் வேண்டுகோளின் பேரில் இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபன அதிகாரிகள் இன்று விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

நவீன பொதுச் சந்தை நிர்மாணிப்பு பணிகள் சுமார் 193 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் ஏறாவூர் நவீன பொதுச் சந்தை அதன் வியாபார நடவடிக்கைகளுக்காக அடுத்தாண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டு வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் கையளிக்கப்பதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவே இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபன அதிகாரிகளைத் தாம் களத்திற்கு வரவழைத்திருந்ததாக முன்னாள் முதலமைச்சர் தெரிவித்தார்.

இதன் போது, தற்போது அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை ஏற்பட்டுள்ள போதும் நிர்மாணப் பணிகளை முடங்க விடாது நிர்மாணப் பணிகளை தங்கு தடையின்றி மேற்கொண்டு வெகுவிரைவில் ஏறாவூர் நவீன பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதியை கையளித்து தமது வியாபார நடவடிக்கைகளுக்கு உதவுமாறு இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபன அதிகாரிகளை ஏறாவூர் பொதுச் சந்தை வியாபாரிகள் கேட்டுக் கொண்டனர்.

அனைத்து சமூகங்களும் ஒன்று கூடும் வர்த்தக நகரான ஏறாவூரின் சந்தை வியாபாரிகள் நவீன பொதுச் சந்தை நிர்மாணிப்பின் காரணமாக இடம்பெயர நேரிட்டுள்ளதால் அதிக தியாகங்களைச் செய்துள்ளார்கள் என்று ஏறாவூர் நகர மேயர் இறம்ழான் அப்துல்வாஸித் கள விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபன அதிகாரிகளிடமும் முன்னாள் முதலமைச்சரிடமும் எடுத்துரைத்தார்.

அத்தோடு முடிந்த வரையில் வெகுவிரைவில் பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதியை நிறைவு செய்து வியாபாரிகளிடம் கையளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

சந்தை வியாரிகள் எவரும் பாதிக்கப்படாத வகையில் நவீன பொதுச் சந்தை கட்டிடத் தொகுதியை கட்டம் கட்டமாக நிறைவு செய்து மிக விரைவில் அதன் வியாபார நடவடிக்கைகளுக்காக கையளிக்கவுள்ளதாக இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபன அதிகாரிகள் முன்னாள் முதலமைச்சர், ஏறாவூர் நகர மேயர், ஏறாவூர் பொதுச் சந்தை வியாபாரிகள் ஆகியோரிடம் தெரிவித்தனர்.

இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபன பிரதிப் பொது முகாமையாளர் எந்திரி, பிரியானி கரவிட்ட (Deputy General Manager and Engineer of the State Engineering Cooperation), நிர்மாணிப்பு பகுதிக்கான முகாமையாளர் எந்திரி எஸ்.ரி.பி. அழககோன், நிர்வாக முகாமையாளர் எந்திரி சந்திமா ஹேரத், இணைப்புச் செயலாளர் எந்திரி ஏ.ஆர்.எம். ரஸ்மின் ஆகியோருடன் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர், ஏறாவூர் நகர மேயர் உட்பட இன்னும் பல அதிகாரிகளும் இக்கள விஜயத்தில் இடம்பெற்றிருந்தனர்.

Latest Offers