ஆளுநரின் உத்தரவிற்கு அமைய மீள திறக்கப்பட்ட பேருந்து நிலையம் செயற்படவில்லை

Report Print Theesan in சமூகம்

வட மாகாண ஆளுநரின் உத்தரவிற்கு அமைய மீள திறக்கப்பட்ட வவுனியா பழைய பேருந்து நிலையம் செயற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 7ஆம் திகதி வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் உத்தரவிற்கு அமைய பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வந்து செல்வதற்கு பல்வேறு தரப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த 7ஆம் திகதியிலிருந்து பேருந்து நிலையம் மீள திறக்கப்பட்ட போதும் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்துகள் தமது சேவைகளை திறம்பட மேற்கொள்ளவில்லை.

வட மாகாண ஆளுநரின் கலந்துரையாடலின் போது ஒரு முடிவு எடுக்கப்பட்ட நிலையிலும், வட மாகாண ஆளுநர் உத்தரவிற்கு அமையவும் பேருந்து நிலையத்தில் இரு சேவைகளும்இடம்பெறவில்லை என பயணிகள் கூறுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனால் பயணிகள் பெரும் சிரமத்தினை மேலும் எதிர்நோக்கியுள்ளதாக தெரியவருகிறது

இந்த விடயம் குறித்து பழைய பேருந்து நிலையத்திலுள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களிடம் வினவிய போது,

பழைய பேருந்து நிலையம் திரும்பவும் செயற்படவுள்ளதாக வெளியான தகவலையடுத்து நாங்கள் மிகவும் மகிழ்வடைந்திருந்தோம். எனினும் அதன் பிறகு இடம்பெற்ற செயற்பாடுகள் எமக்கு திருப்தி அளிக்கவில்லை.

இவ்விடயத்தில் தொடர்புபட்ட அதிகாரிகள், பொலிஸார் இதற்கு சரியான ஒரு நடவடிக்கை மேற்கொண்டு இரு சேவைகளும் இணைந்து மேற்கொள்வதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளனர்.