மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளை பார்வையிட்ட இலங்கைக்கான பிரித்தானிய பிரதிநிதிகள்

Report Print Ashik in சமூகம்

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'சதொச' வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு பணிகளை பார்வையிட இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிக தூதரக பிரதிநிதிகள் இருவர் அப்பகுதிக்கு நேரடி விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

குறித்த பிரித்தானிய உயர்ஸ்தானிக தூதரக பிரதி நிதிகள் இன்று காலை 10.30 மணியளவில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு இடம்பெறும் பகுதிக்குச் சென்று நேரடியாக அகழ்வு பணிகளை அவதானித்துள்ளனர்.

இந்நிலையில், மனித எலும்புக்கூடுகளின் அகழ்வு மற்றும் ஏனைய விபரங்களை அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸவிடம் கேட்டு அறிந்து கொண்டுள்ளனர்.

மன்னார் மனித புதை குழி அகழ்வுப் பணியானது 115ஆவது நாளாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது தற்போது வரை 266 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அகழ்வு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிக தூதரக பிரதி நிதிகள் மனித புதை குழியை பார்வையிட வந்த போது புலனாய்வுத்துறையினர் பலர் குறித்த பகுதியை சூழ்ந்து கொண்டதோடு, கையடக்கத் தொலைபேசிகளில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.