இரணைமடு நினைவுக் கல் திட்டமிட்டப்படி பழைய இடத்தில்

Report Print Suman Suman in சமூகம்

இரணைமடு குளத்தில் திரை நீக்கம் செய்யப்பட்ட முதலாவது நினைவுக் கல் திட்டமிட்டப்படி அதே பகுதியில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினரால் வைக்கப்பட்டுள்ளது.

இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றிருந்தவேளை அதன் நிறைவுக்காக குளத்தின் சுற்றுவட்டம் அழகுபடுத்தும் பணிகள் இடம்பெற்று வந்தன.

இந்த நிலையில் குறித்த நினைவு கல் அமைந்திருந்த பகுதியும் பக்குவமாக அகற்றப்பட்டு அந்த பகுதியில் சுற்றுவட்டம் ஒன்றும் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த சுற்றுவட்டம் அமைந்திருந்த பகுதியில் நினைவுக் கல்லையும், புதிய நினைவுக் கல்லையும் அமைப்பதற்கான பணிகள் இடம்பெற்று வந்த நிலையில், ஜனாதிபதியினால் குறித்த குளம் விவசாயிகளிடம் கையளிக்க மேற்கொள்ளப்பட்ட திடீர் நடவடிக்கை காரணமாக உடனடியாக குறித்த முதலாவது நினைவு கல்லை அப்பகுதியில் பொருத்த கால அவகாசம் போதுமானதாக இல்லாது போய்விட்டது என குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில் ஜனாதிபதியால் திரை நீக்கம் செய்வதற்குரிய புதிய நினைவு கல்லை மாத்திரம் அன்றையதினம் பொருத்தப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.

இதற்கிடையில் சில தமிழ் ஊடகங்களில் பழைய நினைவுக்கல் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் டட்லி சேனநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்ட கல்லை சுதந்திர கட்சியின் ஜனாதிபதி இல்லாது செய்து விட்டார் என செய்தி வெளியிடப்பட்டிருந்தது எனவும் இந்த விடயம் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதற்கிடையில் குறித்த கல்லினை ஏற்கனவே அமைந்திருந்த பகுதியில் பொருத்துவதற்கு நடவடிக்கைகளை நீர்ப்பாசனத் திணைக்களம் மேற்கொண்டிருந்தது.

அதற்கமைவாக இன்று காலை குறித்த கல் பழைய இடத்தில் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.

பழைய நினைவுக் கல்லினை அகற்றும் அல்லது அழிக்கும் நோக்கம் காணப்பட்டிருந்தால் குறித்த கல்லினை பாதுகாப்பாக அகற்றி வைத்திருந்து அதனை மீளவும் அதே இடத்தில் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டிருக்காது என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Latest Offers