உலகில் தமது இனத்திற்காக உயிரைதுச்சமென மதித்து உயிரை நீத்தவர்கள் தமிழர்கள்!

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

அம்பாறை மாவட்டத்தில் ஐந்தாவது குழந்தை பெறும் தமிழ் குடும்பம் ஒவ்வொன்றிற்கு 25,000 ரூபாவை சன்மானமாக வழங்க வசீகரன் அறக்கட்டளை நிதியம் முன்வந்துள்ளது என இவ்வாறு வசீகரன் அறக்கட்டளை நிதிய வடக்கு, கிழக்குமாகாண பணிப்பாளரும் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்துள்ளார்.

அம்பாறை வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் க.பொ.த. சாதாரணதர மற்றும் ஏனைய மாணவர்களுக்கான இலவச பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பித்து வைத்து குறித்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வு வளத்தாப்பிட்டியில் நிதியத்தின் மாவட்ட தலைவர் பி.பிரபு தலைமையில் இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் இனப்பெருக்க வீதம் வலுவாக குறைந்து விட்டது. குறிப்பாக நகரப் புறங்களில் வெகுவாக குறைந்து விட்டது. ஆனால் ஒரு நாட்டில் அனைத்திற்கும் அடிப்படை அளவுகோலாக இருப்பது சனத்தொகையே. எனவே தமிழர்களின் சனத்தொகை செறிவை அதிகரிக்க வேண்டும்.

இதற்காக வசீகரன் அறக்கட்டளை நிதிய முகாமைத்துவ நிறைவேற்றுப்பணிப்பாளர் இந்த திட்டத்தை முன்வைத்துள்ளார்.

இன்று தமிழ் மக்களின் சனத்தொகையை கூட்ட வேண்டும் என்பதற்காக இத்திட்டத்தை முன்வைத்துள்ளார். மாவட்டத்தின் பிரதேசங்கள் தோறும் எமது அமைப்பின் முகவர்கள் உள்ளனர். அவர்களுடாக மக்கள் விண்ணப்பிக்கின்ற கட்டத்தில் எம்மால் உடனடியாக அந்த 25,000 ரூபாவை வழங்க முடியும்.

இன்று அரசாங்கம் குழப்பத்திலுள்ளது. பலமான அரசாங்கம் வேண்டி தனது அதிகாரத்திற்காக தமிழ் மக்களின் தயவை மீண்டுமொருமுறை நாடிநிற்கிறது.

அன்று சகலரையும் வழிநடாத்திய தமிழன் இன்று வழிதவறுவதை காணமுடிகிறது. எனவே இழந்த கல்வியை மீளப்பெற்று அதிகாரத்தை பெறவேண்டும். இதில் எமது சாணக்கியத்தையும் சாதுர்யத்தையும் பயன்படுத்த வேண்டும்.

தமிழினத்தின் இருப்பை தக்கவைக்க வேண்டும் என்பதற்காகவே நாம் அரசியலில் இறங்கினோம். சம்மாந்துறை பிரதேசத்தில் பின்தங்கிய நிலையில் தமிழர்களிருந்தாலும் பரீட்சைகளில் திறமைகாட்டி வருவது மகிழ்ச்சியைத்தருகிறது. புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற 96 பிள்ளைகளில் 45பேர் தமிழ் பிள்ளைகளாக இருப்பது பாராட்டுக்குரியது.

உலகில் தமது இனத்திற்காக உயிரைதுச்சமென மதித்து உயிரை நீத்தவர்கள் தமிழர்கள் என்ற வரலாறு உள்ளது. அவர்கள் தாய்க்காகவோ தந்தைக்காகவோ சகோதரத்திற்காகவோ போராடவில்லை.

மாறாக எமது பிற்கால சந்ததியாவது நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காகப் போராடி தன்னுயிரை இழந்துள்ளார்கள். அவர்களது தியாகத்திற்கு அர்த்தம் கற்பிக்க வேண்டுமானால் நாம் படித்து எமதினத்தின் இருப்பை தக்கவைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.