கிழக்கு மாகாணத்தின் கல்வி மட்டத்தினை அதிகரிக்கத் திட்டம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

கிழக்கு மாகாணத்தின் கல்வி பெறுபேறுகளையும், புறக்கிருத்திய செயற்பாடுகளின் அடைவு மட்டங்களையும் மேம்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது.

கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தலைமையில் மாகாணக் கல்வித்திணைக்கள கல்விசார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதன்போதே இத்திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது.

இதன்படி அடுத்தவருடம் நடைபெறவுள்ள ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை , க.பொ.த.சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப் படவுள்ளது.

அதேபோல தமிழ் மொழிதினம், சிங்கள மொழித்தினம், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட புறக்கிருத்திய செயற்பாடுகளில் பெற்றுக் கொள்ளப்படும் வெற்றிகளை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாணம் கணிசமான வளங்களைக் கொண்டிருக்கின்ற போதிலும் கடந்த சில வருடங்களாக பரீட்சைப் பெறுபேறுகளில் வீழ்ச்சி நிலையே காணப்படுகின்றது. இதற்கான காரணங்களைக் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்து பெறுபேறுகளை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப் படவுள்ளதாகவும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் மன்சூர் தெரிவித்தார்.