50ஆவது உயிர் காக்கும் சத்திரசிகிச்சை நிறைவு! கனடா செந்தில்குமரன் அறக்கட்டளையின் சாதனை

Report Print Gokulan Gokulan in சமூகம்

கனடாவை தளமாக கொண்டியங்கும் செந்தில்குமரன் நிவாரண அமைப்பினூடாக புலம்பெயர்ந்து வாழும் மக்களின் நிதி அனுசரணையுடன் பல்வேறு திட்டங்கள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்றன.

வறியமக்களுக்கான இலவச இருதய சத்திரசிகிச்சை, மருத்துவ நிதியுதவி, கிளிநொச்சியில் மாற்று திறனாளிகளுக்கான நடமாடும் மருத்துவ சேவை, போரில் பாதிக்கப்பட்டு உடல் அவயங்களை இழந்தோருக்கான வாழ்வாதாரங்கள், இலவச கணினி வகுப்புகள், பள்ளிக்கூடத்துக்கான சுத்தமான குடிநீர் மற்றும் சமூக வாழ்வாதாரத்தை மேம்படுத்தவென பல்வேறு திட்டங்களை செந்தில்குமரன் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் செயல்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் இந்த கிழமை நடைபெற்ற 50ஆவது இருதய சிகிச்சையை முன்னிட்டு அதற்கு துணைபுரியும் மருத்துவ குழுவினை கெளரவிக்கும் பொருட்டு ஒரு சிறப்பு நிகழ்வு செந்தில்குமரனால் லங்கா வைத்தியசாலை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதில் கனேடிய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகலும் கலந்து சிறப்பித்தனர்.

செந்தில்குமரன் இலங்கையின் வடக்கு - கிழக்கில் ஆற்றி வரும் சேவையினை கனேடிய உயர்ஸ்தானிகராலய அதிகாரி கிளவுட்கோலெட் பாராட்டியதுடன், அவரின் நிவாரணப்பணி மேலும் பல பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்று வாழ்த்தியிருந்தார்.

தனது உரையின் பின்னர் செந்தில்குமரனின் நிவாரண அமைப்பினூடாக மேற்கொள்ளப்படும் இலவச இருதய சத்திரசிகிச்சைக்கு தங்களாலான பங்களிப்பினை வழங்கி வரும் மருத்துவ குழுவிற்கும், இருதய சத்திரசிகிச்சைக்கு விசேட கட்டண கழிவுகளை வழங்கி உதவும் லங்கா வைத்தியசாலை நிர்வாகத்தினரையும் கனேடிய உயர்ஸ்தானிகராலய அதிகாரி கிளவுட்கோலெட் பாராட்டியதுடன், கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ககன்சிகந்தினால் வழங்கப்பட்ட பாராட்டுப் பத்திரத்தினையும் அவர் வழங்கி கெளரவித்தார்.

இதேவேளை 50 சத்திரசிகிச்சையினை வெற்றிகரமாக முடித்து நிதியுதவிகளை பொறுப்பேற்று நடத்தி கொண்டிருக்கும் செந்தில்குமரன் பேசும் போது தமது நிவாரண அமைப்பு புலம்பெயர்ந்து வாழும் மக்களுடன் இணைந்து இந்த உயிர்காக்கும் சேவையில் ஈடுபடுவது மிகுந்த மன நிறைவை தனக்கு தருவதாகவும், தாம் மனித ரூபத்தில் பல கடவுள்களை நித்தம் சந்திப்பதாகவும் தமது உரையில் கூறினார்.

லங்கா வைத்தியசாலையின் தலைவர் பிரசாத்மெதவத்த மற்றும் அந்த நிறுவனத்திற்கும், மருத்துவக் குழுவிற்கும் புலம்பெயர் வாழ்சமூகத்தின் சார்பாகவும் அதன் பயனாளிகள் சார்பாகவும் தமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டார்.

சென்ற கிழமை இருதய அறுவைசிகிச்சை மூலம் உயிர் காப்பாற்றப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த வெண்ணிலவன், நீர்வேலியை சேர்ந்த தர்ஷினி ஆகியோர் தாங்கள் இந்த நோயினால் பட்ட துன்பத்தினை கூறி செந்தில்குமாரனையும் கனடா மக்களையும் நன்றி கூர்ந்தனர்.

.

Latest Offers