எனது கருத்துக்களை ஊடகங்கள் திரிபுபடுத்துகின்றன! சிவமோகன் எம்.பி ஆதங்கம்

Report Print Theesan in சமூகம்

என்னால் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து ஒன்றினை மாற்றியமைத்து எனக்கு அவதூறு பரப்பும் நடவடிக்கையில் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கும்போது,

ஊடகம் ஒன்று அண்மையில் இடம்பெற்ற ரணில் விக்ரமசிங்காவிற்கு ஆதரவாக இடம்பெற்ற பிரேரணை ஒன்றில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆதரித்து வாக்களித்தது. அந்த விடயத்தில் நான் கூறிய கருத்தை திரிவுபடுத்தி என் மீது அவதூறு பரப்பும் விதமாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உண்மையில் எனக்குத் தெரிந்தவரையில் அது ஒரு கௌரவமான ஊடகம். அவ்வாறான ஊடகம் சேறடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதை என்னால் பொறுக்க முடியவில்லை.

இதனைத் தெரிவிக்கும் முகமாகவே இன்றைய சிறப்பு ஊடக சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தேன். என்னுடைய கருத்து தெளிவாக சிங்கள ஊடகங்களிலும் என்னுடைய குரலில் வெளிவந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நான் தெரிவித்திருந்த கருத்தை மறுதலித்து தாங்கள் நினைத்தது போல இவ்வாறு எழுதியுள்ளார்கள். சலுகைகளைப் பெற்றுக்கொண்டு சுமூகமாக அரசியல் செய்வதற்காக ஆதரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவ்வாறு அல்ல. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அண்மைய இந்த அரசியல் சூழ்ச்சியின் பின்னர் நடைபெற்ற நிகழ்வுகளில் நேர்த்தியாக மிகவும் சிந்தித்துதான் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியும்.

நான் சொன்ன கருத்து இதுதான். மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் 2015க்கு முன்னர் நடைபெற்ற புலனாய்வாளர்கள் என்ற போர்வையில் இறக்கப்பட்ட குண்டர்கள் தமிழ்ப்பிரதேசங்களில் பாரிய அராஜகங்களைச் செய்துள்ளார்கள்.

இராணுவம் மக்களின் காணிகளை அபகரித்து அது தங்களுடையது என்று கிராமங்களையும் தங்களுடைய கைகளில் வைத்துக்கொண்டிருந்தார்கள்.

அதேபோல சில பத்து ஊடகவியலாளர்கள் கூட காணாமல் போயிருந்தது உங்கள் எல்லோருக்கும் தெரியும். கடத்தப்பட்டுள்ளது உங்களுக்குத் தெரியும். கொல்லப்பட்டிருந்தார்கள், விரட்டி வெளிநாடுகளுக்கு ஓடியிருந்தார்கள்.

எனவே அவ்வாறான ஒரு சுதந்திரமற்ற நிலை இருந்தபோது தான் 2015ஆம் ஆண்டு ஒரு அரசியல் புரட்சி ஏற்படுத்தப்பட்டது. அதன் பின்னர் மக்களுக்கான ஒரு சமூகமான ஒரு நிலைமை இருந்து வந்துள்ளது.

தங்களுடைய தேவைகளை போராட்டத்தினூடாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைமை இருந்துள்ளது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

சுதந்திர ஊடகத்துறை சுதந்திர நீதித்துறை சுதந்திர தேர்தல்துறை போன்ற பல்வேறு நிலைமைகள் உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலை மாறிவிடக்கூடாது என்பதில் தெளிவாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இருந்தது.

எனவே அங்கு யாரை ஆதரித்தார்கள் என்பது இல்லை, இங்கு யார் வரக்கூடாது என்பதற்காக நாங்கள் சில முடிவுகளை எடுக்கவேண்டியவர்களாக இருந்தோம்.

சில கட்சிகள் கூறுவது போல நடுநிலையாக நிற்கவேண்டும் என்பது நிச்சயமாக மகிந்தவின் ஆட்சியைத் தொடர்வதற்கான உறுதுணையான ஒரு நிகழ்ச்சி நிரல் என்பது உங்களுக்கு வெளிப்படையாகத் தெரியும்.

எனவே அவர்கள் தங்களது கருத்தை வெளிப்படையாக சொல்லவேண்டும். மகிந்தவின் ஆட்சிதான் தொடரவேண்டும் அதற்காக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நடுநிலை வகிக்கவேண்டும் என்று அவர்கள் சொல்ல முடியுமானால் அவர்கள் சொல்லவேண்டும்.

அதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனது கருத்தைத் தெரிவிக்கும். நடுநிலையாக நிற்கவேண்டும் என்று சொன்னவர்கள் எல்லோரும் பணம் பட்டுவாடாவின் கீழ் போனவர்கள் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers