ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளருக்கு பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் அழைப்பு

Report Print Theesan in சமூகம்

கொழும்பிற்கு விசாரணைக்காக வருமாறு ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக வவுனியாவில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு நேரடியாக சென்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகள் க.துளசியின் மனைவியிடம் இது தொடர்பான கடிதத்தை கையளித்துள்ளனர்.

ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கணேசலிங்கம் சந்திரலிங்கம் என்னும் துளசியை இம் மாதம் 19ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள புலனாய்வு பிரிவு அலுவலகத்திற்கு வருகை தருமாறு கையளிக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக எதிர்வரும் 19ஆம் திகதி காலை 09.30 இற்கு 2 ஆம் மாடி புதிய செயலக கட்டடத் தொகுதி கொழும்பு - 01 எனும் முகவரியில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் அந்த கடிதத்தில் தாம் விசாரணைக்காக அழைக்கப்பட்டமைக்கான காரணம் ஏதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், இவ்வாறான நடவடிக்கை முன்னாள் போராளிகளின் பொதுவழி செயற்பாடுகளை அச்சுறுத்தும் கையில் உள்ளதாகவும் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.