மடுத்திருத்தலத்தை புனிதப் பிரதேசமாக்கும் முயற்சி அபாயமான பின்னடைவை ஏற்படுத்தலாம்

Report Print Ashik in சமூகம்

மடுத்திருத்தலத்தை புனிதப் பிரதேசமாக்கும் அரசாங்கத்தின் முயற்சி தொலை நோக்கு பார்வையில் மிக அபாயமான பின்னடைவை ஏற்படுத்தலாம் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகைக்கு இன்று அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும்,

இலங்கை அரசாங்கத்தின் நன்கு திட்டமிட்ட உள்நோக்கமுள்ள எண்ணத்துடன் புனித பிரதேசமாக்க அவசரகதியில் முயல்வது இயல்பாகவே ஐயத்தை உண்டாக்குவதுடன் இச் செயலுக்குப்பின் மதங் கடந்த மிகப் பெரிய அரசியல் உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை.

இவ்விடயம் தொடர்பாக ஏலவே தங்களுக்கு ஒரு கடிதமும் பொது அமைப்புக்களின் ஒன்றியம் சார்பாக அனுப்பியிருந்தோம்.

பல அருட்தந்தையர்களுடன் இதன் பாதகத்தன்மை பற்றி விவாதித்திருந்தேன். புனிதப் பிரதேசமாக்கிய கதிர்காமத்தின் இன்றைய நிலை என்ன என்பது யாவரும் பகிரங்கமாக அறிந்த உண்மை.

அதற்குப் பின்னரும் தமிழர் தேசத்தின் அடையாள இருப்பிடங்களை சிங்கள தேசியமயமாக்கலுக்கு பகிர்ந்தளிப்பது எதிர்காலத்தில் பாரிய பின் விளைவை ஏற்படுத்துவதுடன் நிர்வாக இருப்பியலை சவாலுக்குட்படுத்தி சரணாகதி நிலையை ஏற்படுத்தும். ஆகவே நாம் விழித்துக் கொள்வது அவசியம்.

அவர்கள் அபிவிருத்தியை காட்டி எம்மை மயக்க முற்படலாம். இவை எல்லாம் அரசின் நீண்டகால செயற்றிட்டங்களே என்பது வெள்ளிடைமலையாகும்.

ஆகவே தயவு செய்து தொலை நோக்கு பார்வையுடன் அணுகி புனிதப் பிரதேசமாக்கும் கோரிக்கையை மறு பரிசீலனைக்கு உட்படுத்துமாறு தங்களை தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் பிரதிகள் மன்னார் மறைமாவட்ட சகல அருட்தந்தையர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...