பிரின்ஸ் என்ற பெருவிருட்சம் சாய்ந்தமையினால் பெரும் துயர் அடைகின்றோம்!

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு மண்ணின் வெற்றியாளனாக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ் காசிநாதர் வெற்றிடமொன்றை விட்டுச்சென்றுள்ளார். பிரின்ஸ் என்ற பெருவிருட்சம் சாய்ந்தமையினால் பெரும் துயர் அடைகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

மட். மெதடிஸ் மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரின்ஸ் காசிநாதரின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்,

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆற்றல் மிகு ஆங்கில ஆசிரியராக, ஆளுமை கூடிய அதிபராக, அஞ்சா நெஞ்சமுடைய நாடாளுமன்ற உறுப்பினராகத் திகழ்ந்து மட்டக்களப்பு மண்ணுக்கும் பெருமை சேர்த்த பிரின்ஸ் காசிநாதர் என்ற பெறுமதியும் மிக்க பெருமகன் தனது 93 ஆவது அகவையில் இயற்கை எய்தினார் என்ற செய்தி எம்மை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது.

மட்டக்களப்பு மெதடிஸ்த மிசன் மத்திய கல்லூரியில் மூன்று சதாப்தங்களுக்கு மேலாக கல்விப் பணியாற்றிய பெருமகனின் இழப்பு ஈடுசெய்ய முடியாததொன்றாகும் கடமையில் கடுமையானவர்.

கண்டிப்பு மிக்கவர், கரிசனை மிக்கவர். காத்திரமான பாத்திரமேற்றவர் என்றெல்லாம் பாராட்டத்தக்க விதத்தில் பதவிக்கு பெருமை சேர்த்த பணியாளன் பண்பாளனின் இழப்பு பேரிழப்பாகும்.

தனது கல்லூரியில் கற்ற பழைய மாணவர்கள் மீது ஆழமான அன்பையும், அக்கறையையும் இறுதி வரை காட்டி வந்தார். சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கக்கூடிய விதத்ததில் காசியமாகவும், காத்திரமாகவும் பேசும் வல்லமை மிக்கவராக இவர் காணப்பட்டார்.

மட்டக்களப்பு மண் மறக்க முடியாத பாத்திரத்தினை இவர் வகித்திருந்தார். இவரது ஆங்கிலப்புலமை நம்மவர்க்கும், நாடாளுமன்றத்திற்கும் பெருமை சேர்த்தது.

மட்டக்களப்பு மண்ணின் வெற்றியாளனாக இருந்த இவர் வெற்றிடமொன்றை விட்டுச்சென்றுள்ளார். இவரால் உருவாக்கப்பட்ட மாணவர்கள் இவரது வெற்றிடத்தை நிரப்புவதே அவருக்கு செய்ய வேண்டிய கைமாறாக இருக்க வேண்டும்.

“தோன்றிற் புகழொடு தோன்றுக - அஃதிலார் தோன்றிலிற் தோன்றாமை நன்று” என்ற வள்ளுவர் மொழிக்கு வலுசேர்த்த பெருந்தகையே உங்கள் ஆத்மா இறைபேறடைய பிரார்திக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...