வடக்கு - கிழக்கில் மக்கள் குடியிருப்புக்குள் கடல் நீர்! ஆபத்தான நிலையில் பல கிராமங்கள்..

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை நகரை சுற்றியுள்ள கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதாகவும், கடலுக்குச் செல்வோர் மிகவும் அவதானமாக இருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வழமைக்கு மாறாக உயரமான அலைகள் வருவதாகவும், விடுமுறை தினமாக இருப்பதால் வெளியிடங்களில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் கடலுக்குச் சென்று குளிக்க வேண்டாம் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

திருகோணமலை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கடற்கரை பிரதான வீதியின் அருகில் அலைகள் வருவதையும் காணக்கூடியதாக உள்ளது.

மூல்லைத்தீவு

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் வலுவான தாழமுக்க மண்டலமாக மாறி தற்பொழுது பாரிய சூறாவளியாக உருவெடுத்துள்ள நிலையில் முல்லைத்தீவு கடலின் கொந்தளிப்பு தற்பொழுது அதிகமாக காணப்படுகின்றது.

மேலும் குறித்த பிரதேச குடியிருப்புகள் பலத்த சேதங்களுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரதேசங்களில் கடல் நீர் உட்புகுந்ததால் மீனவர்களின் வலைகள் மற்றும் படகுகள் நீரில் இழுத்து செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரையோரப்குதி மக்கள் அவதானமாக செயற்படுடமாறு முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல்கள் விஸ்வா

மன்னார்

வடக்கின் முக்கிய மாவட்டமான மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சில கிராமங்களில் இன்று காலை 6 மணியில் இருந்து கடல் நீர் புகுந்து வருகின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சாந்திபுரம், சௌத்பார், எமில் நகர், ஜிம்ரோன் நகர், ஜீவபுரம், பனங்கட்டிக்கோட்டு கிழக்கு, மேற்கு ஆகிய கிராமங்களினுள் கடல் நீர் படிப்படியாக செல்ல ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

மன்னார், புதையிரத வீதி பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் ஊடாகவே கடல் நீர் கிராமங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட கிராமங்களின் கிராம அலுவலகர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளனர்.

மேலதிக தகவல் ஹாஷிக்

மட்டக்களப்பில் ஊருக்குள் புகுந்த கடல் அலைகள்

மட்டக்களப்பு நாவலடி கடற்கரைப் பகுதிகளில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளது.

இன்று மாலை மட்டக்களப்பு நாவலடி கிராமத்திற்குள் திடீரென கடல் நீர் உட்புகுந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுனாமி அலைகள் போன்று கடல் அலைகள் ஊருக்குள் புகுந்ததால் சுனாமி வரப்போகிறது என்ற பீதியில் மக்கள் பதறியடித்து ஓடியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Latest Offers