ஜனாதிபதி கொலை சதித்திட்டம்! இன்றைய தினம் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

Report Print Ajith Ajith in சமூகம்

ஜனாதிபதியை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத விசாரணைப்பிரிவின் முன்னாள் உதவி காவல்துறை அதிபர் நாலக டி சில்வாவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.

பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 7(2) ஷரத்திற்கு அமைய நீதவான் நீதிமன்றத்திற்கு பிணை வழங்கும் அதிகாரம் இல்லை என்பதால், வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இந்திய பிரஜையான மர்சலின் தோமஸ் என்பவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இவர்கள் இருவரையும் ஜனவரி 2ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை நாலக டி சில்வாவின் மகன் ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால், அவரை பார்ப்பதற்காக நாலக டி சில்வாவை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறும் நீதவான் ரங்க திஸாநாயக்க, சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.

நாலக டி சில்வாவின் மகன் டெங்கு காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பதாக அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அஜித் பத்திரண நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியிருந்தார். அதனை கவனத்தில் கொண்ட நீதவான், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.