மன்னாரில் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகளை தெரிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

Report Print Ashik in சமூகம்

மன்னார் நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில், இன்று மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு வருவதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும், பரிசோதனைக்கு அனுப்பி வைப்பதற்காகவே இந்த மாதிரிகளை தெரிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் மனித புதைகுழியிலிருந்து எலும்புக்கூடுகளை அகழ்வு செய்யும் பணிகள் இன்று 119ஆவது நாளாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்று வருகிறது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

தற்போது வரை 280 மனித எலும்புக்கூடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 274 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

நேற்றும், இன்றும் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை குறித்த மனித புதைகுழியை பார்வையிட உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பலர் வருகை தருகின்றனர்.

ஆனால், மன்னார் நீதிமன்றத்தின் அனுமதி இன்றி யாரையும் பார்க்க அனுமதிக்க முடியாது. அத்துடன் மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. விசாரணை முடியும் வரை எவ்வித கருத்துக்களையும் கூற முடியாது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியுடன் குறித்த அகழ்வு பணிகளை பார்வையிட்டுள்ளனர்.

தற்போது மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் மன்னார் நீதவான் முன்னிலையில் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

நீதிமன்றம், விசேட சட்டவைத்திய அதிகாரி குழு, தொல் பொருள் திணைக்களம், பொறுப்பான அரச திணைக்களம், பொலிஸ் நிலையம், குற்றவியல் பொலிஸார் ஆகியோர் இணைந்து தற்போது பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விசேட கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் 6 பெற்றுக்கொள்ளப்படவுள்ளன. அவற்றில் தற்போது 2 மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers