கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பதற்றம்!

Report Print Murali Murali in சமூகம்

கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அங்கிருந்து அகற்ற முட்பட்டமையினால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக மலையக இளைஞர்கள் மூவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டம் இரண்டாவது நாடாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றிரவு குறித்த இடத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை பொலிஸார் அகற்ற முற்பட்டமையினால் பதற்றமானதொரு சூழ்நிலை தோன்றியது.

“கூட்டுஒப்பந்தத்தின் மூலம் தோட்டத் தொழலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். முதலாளிமார் சம்மேளனம், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கம் ஆகிய மூன்று தரப்பினதும் கவனத்தை ஈர்க்கும் வகையிலேயே இங்கு போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

வாக்குறுதிகளை வழங்கிவிட்டு இனியும் ஏமாற்றலாம் என அரசியல்வாதிகள் நினைக்க கூடாது. எமக்கான சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்படாவிட்டால், தேர்தல்களின் போது மக்கள் தமது பிரதிநிதிகள் என ஏற்காது நிராகரித்து, அரசியல் அநாதைகளாக்குவார்கள். எனவே சம்பள உயர்வை பெற்றுத்தர வேண்டும்” என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே இரவு 9.30 மணியளவில் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவர்களை பொலிஸார் அங்கிருந்து அகற்ற முற்பட்டுள்ளனர். அதனால் அங்கு பதற்றமானதொரு சூழ்நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers