நன்னீர் மீன்பிடியில் தொடர்ந்தும் ஈடுபட ஈச்சளவாக்கை மீனவர்களுக்கு அனுமதி

Report Print Ashik in சமூகம்

மன்னார் - மாந்தை மேற்கு, காயாநகர் கிராம சேவகர் பிரிவில் உள்ள ஈச்சளவாக்கை கிராமத்தை சேர்ந்த நன்னீர் மீன்பிடி மீனவர்களுக்கு தொடர்ச்சியாக மீன்பிடியில் ஈடுபடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான மீன்பிடி அனுமதியானது இலங்கை மனித உரிமைகள் ஆணைகுழுவின் சிபரிசின் படி இன்று நீரியல் வள திணைக்களத்தின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

யுத்தத்திற்கு முன்னரான காலப் பகுதியின் போது ஈச்சளவாக்கை கிராம பகுதியில் நன்னீர் மீன் பிடியில் ஈடுபட்டு வந்த மீனவர்கள், யுத்த காலப் பகுதியின் போது இடம் பெயர்வுகளை சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் மீண்டும் கிராமத்தில் குடியமர்ந்த பின்னரும் அவர்களுக்கு மீண்டும் நன்னீர் மீன்பிடிக்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமக்குரிய நீதியை பெற்றுத் தரக் கோரி மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் உதவியுடன் இலங்கை மனித உரிமை ஆணைகுக்ழுவிடம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தனர்.

குறித்த முறைப்பாட்டிற்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஜனவரி மாதம் 01ஆம் திகதியில் இருந்து எந்த வித தடையும் இன்றி மீன் பிடியில் ஈடுபடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டு உள்ளதுடன், உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.