தொல்லியல் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தென்னமரவாடி முருகன் ஆலய காணி

Report Print Theesan in சமூகம்

திருகோணமலை - குச்சவெளி, தென்னமரவாடி கிராமத்திலுள்ள முருகன் ஆலயம் மற்றும் அரச மலை ஆகிய பிரதேசங்களை தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அப் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக குச்சவெளி பிரதேச சபைக்கு பொதுமக்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து பிரதே சபை தவிசாளர் ஏ.முபாறக்கினால், அனுமதியற்ற இக்கட்டட வேலைகளை உடனடியாக நிறுத்துமாறும் முறையான அனுமதி பெற்றதன் பின்னர் உரிய வேலைகளை ஆரம்பிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு கட்டடம் அமைக்கப்படும் இடத்திலும் இக்கடிதம் ஒட்டப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தை தொல்லியல் திணைக்களம் கிழித்தெறிந்து விட்டு கட்டட வேலைகளை ஆரம்பித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தை பௌத்த இடமாக்கும் முயற்சிகளை இலங்கை தொல்லியல் திணைக்களம் மேற்கொண்டு வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் குறித்த மலைப்பகுதியில் புத்தர் சிலை நிறுவுவதற்காக பௌத்த துறவிகள் வருகை தந்தபோது கிராம மக்கள் இணைந்து அதனை எதிர்த்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதையடுத்து தற்போது குறித்த மலையடிவாரத்தில் தொல்பொருள் திணைக்களம் தமது பெயர்ப் பலகையை நாட்டியுள்ளதோடு தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஆலய இடத்தை தொல்பொருள் திணைக்களம் அபகரித்து பௌத்த தலமாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதனை உரிய தரப்பினர் கருத்திற்கொண்டு தமது மலையையும் தமது முருகன் ஆலயத்தையும் மீட்டுத்தந்து ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வழியேற்படுத்தி தர வேண்டும் என்று அப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்க உபதலைவர் கந்தையா பரமநாதன் இது குறித்து தெரிவிக்கையில்,

1952இல் குறித்த கிராமத்தில் பிறந்து அங்கேயே வாழ்ந்து வந்த தாம் தமது கிராமத்தில் இதுவரையில் பௌத்த மத குரு ஒருவரோ, பௌத்த தலமோ இருக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.

அத்துடன் குறித்த ஆலயத்தோடு இணைந்த தமது காணிகளுக்கு 1803ஆம் ஆண்டு பிரித்தானியர் காலத்து அரசினால் உறுதி ஆவணங்கள் தம்மிடம் உள்ளதாகவும் 1984ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்ற பின்னர் குறித்த பகுதி பெரும்பான்மை இனத்தவரால் சுவீகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமது வயல் நிலங்கள் விவசாய நிலங்கள் பலவும் அபகரிக்கப்பட்டு இன்று போர் முடிந்து மீள்குடியேற்றம் வந்த நிலையிலும் நிலங்களை மீட்க முடியாது திண்டாடுவதாகவும் தென்னைமரவாடி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமது இந்த வரலாற்றுத் தொன்மை மிக்க ஆலயத்தையும் அபகரிக்க இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் தென்னைமரவாடி மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த ஆலயத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக நேற்று ஈழ புரட்சி அமைப்பின் தேசிய அமைப்பாளர் மாணிக்கம் ஜெகன், ஈழ புரட்சி அமைப்பின் பொருளாளரும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினருமான சசிதரன், வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் து.தமிழ்ச்செல்வன், ஈழ புரட்சி அமைப்பின் உறுப்பினர் ஹிரி நரோன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.