கிளிநொச்சி, முல்லைத்தீவு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் மோசடி

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி, முல்லைத்தீவு சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் பாரிய மோசடி இடம்பெற்று வருகின்றது என சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர் அகிலன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி, முல்லைத்தீவு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் 50 கோடிக்கு மேல் ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளது.

ஒவ்வொரு சிவில் பாதுகாப்பு திணைக்களத்திலும், பண்ணைகளில் பணிபுரியும் உத்தியோகத்தர்களிடம் இருந்து வருமானமாக 3000 ரூபாய் பணம் தொடர்ச்சியாக பெறப்பட்டு வருகிறது. அவற்றில் பல மோசடிகள் இடம்பெற்றுள்ளன.

இதற்கான முழு ஆதாரமும் என்னிடம் உள்ளது. இவ்விடயம் தொடர்பில் பல்வேறு தரப்பிடம் கொண்டு சென்றும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என்பதாலேயே ஊடகங்களின் ஊடாக வெளிப்படுத்த முன்வந்துள்ளேன்.

பண்ணைகளில் பணிபுரியும் நபர்களிடமிருந்து 3000 ரூபாய் பணம் பெறப்படுவதுடன், அதற்கு முறையாக பற்று சீட்டுகள் வழங்கப்படுவதில்லை. குறிப்பிட்ட தொகை பணம் வரவாக காட்டப்படாது அந்த பண்ணைகளில் காட்சிப்படுத்தப்படுகின்றன.

இவ்வாறு கொள்ளையிடப்படும் பணம் தனிநபர்களின் சட்டை பைகளுக்கு செல்கின்றன. இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி நேரடியாக கண்காணித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

இங்கு பணிபுரிபவர்கள் அங்கவீனர்களாகவும், முன்னாள் போராளிகளாகவும் உள்ள நிலையில் இவ்வாறான மோசடி இடம்பெற்று வருகின்றது.

மலையக மக்கள் 1000 ரூபாய் ஊதியம் கோரி போராட்டம் நடத்தி வரும் நிலையில், இங்கு சிலரது வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கு 1000 ரூபாய் செலவு செய்யப்படுகிறது. இவ்வாறு பலர் சுகபோக வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பில் ஜனாதிபதி நேரடி விசாரணையை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்கான முழுமையான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.