மொழி உரிமை மீறப்பட்டுள்ளதாக யாழ். கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு

Report Print Sumi in சமூகம்

மொழி உரிமை மீறப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக வட மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்திற்கு கோப்பாய் பொலிஸார் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

விசாரணைக்கு முன்னாள் வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவரும் சமூகமளித்திருந்தார். விசாரணையின் பின் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த 30ஆம் திகதி திருநெல்வேலி சந்தியால், பலாலி நோக்கி சென்ற போது என்னை பொலிஸார் வீதியில் மறித்தனர்.

வாகன ஆவணங்களை காட்டுமாறு கோரியிருந்தார்கள். நான் பொலிஸாரிடம் ஆவணங்களை சமர்ப்பித்திருந்தேன்.

அப்போது, வாகன வரி தொடர்பான ஆவணத்தை வாகனத்தில் காட்சிப்படுத்தவில்லை என சுட்டிக்காட்டி அது தண்டணைக்குரிய குற்றமென கூறினார்கள்.

ஆவணங்களை கேட்டீர்கள் நான் கொடுத்தேன். ஆனால், வாகனத்தில் காட்சிப்படுத்தவில்லை என்பது எவ்வாறு குற்றமென கேட்டபோது, ஆசனப்பட்டி அணியவில்லை என கூறினார்கள்.

சரி அதற்கும் வழக்குப் பதிவு செய்து கொள்ளுங்கள் என்றேன். எமது பெரியவர் குறைந்தது 5 வழக்குகளை பதிவு செய்து வருமாறு கூறியிருக்கின்றார்.

எனவே, உங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம் என கூறி சிங்களத்தில் எழுதப்பட்ட ஒரு ஆவணத்தை தந்தார்கள். அந்த ஆவணத்தில் என்ன எழுதப்பட்டிருக்கின்றது என தெரியவில்லை.

எனவே, குறித்த ஆவணத்தை சிங்களத்தில் தந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட பிராந்திய அலுவலத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளேன்.

அந்த முறைப்பாட்டினை விசாரிப்பதற்காக இன்று கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டார்.

அரசியலமைப்பின் பிரகாரம் வடக்கு, கிழக்கில் நிர்வாக மொழி தமிழ். எனவே, வடக்கு, கிழக்கில் உள்ளவர்களுக்கு தமிழில் தான் ஆவணங்களை வழங்க வேண்டும்.

அதனால், எமது மொழி உரிமை மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்தேன்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம், கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டு உரிய தீர்வைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மொழி உரிமைகள் பாதிக்கப்பட்டோர் முன்னோக்கி நகர்வோம் என்ற அமைப்பின் ஊடாக எனது கவனத்திற்கு கொண்டு வருவதற்கு என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.