வவுனியா சுற்றுவட்ட வீதி தொடர்பில் நகரசபை தலைவரின் அசமந்தப்போக்கு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா நகரசபைக்குட்பட்ட சந்தை சுற்றுவட்ட வீதி தொடர்பில் வவுனியா நகரசபை அசமந்தப்போக்குடன் செயற்படுவதாக வரியிறுப்பாளர்கள் சுட்டிக்காட்டும் நிலையில், நகரசபை தலைவர் உரிய பதிலை வழங்காதுள்ளதாக குறித்த வட்டார உறுப்பினர் ரி.கே. இராசலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று எமது செய்தியாளருக்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

சந்தை சுற்றுவட்ட வீதியில் வர்த்தக நிலையங்களை வாடகைக்கு பெற்றுள்ளவர்கள் வீதியில் மரக்கறிகளை விற்றுவருவதனால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுவதாக வரியிறுப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த வீதி இருவழி வீதியாக காணப்படுவதனாலும், வாகன போக்குவரத்து அதிகமாக நிலவுவதால் குறித்த வியாபார நிலையங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய கடமை நகரசபைக்கு உள்ளது .

வர்த்தக நிலையங்களுக்கு வெளியில் மரக்கறிகளை விற்பனை செய்வதனால் மரக்கறிகள் பழுதடைந்த நிலையில் அதனை நுகர்வோருக்கு விற்பனை செய்வது தொடர்பிலும் சுகாதார பரிசோதகர்கள் கவனத்திற் கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக நான் நகரசபை உறுப்பினரான காலத்திலிருந்தே நகரசபைக்கும், தலைவருக்கும் சுட்டிக்காட்டி வருகின்றேன். இது தொடர்பாக வவுனியா நகரசபையின் உபதலைவரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோதிலும் பலன் கிடைக்கவில்லை.

எனினும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எழுத்து மூலமாகவும் சமர்ப்பித்துள்ளேன். குறித்த வீதியில் வியாபாரத்தினை வெளியில் வைத்து செய்வதால் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் நகரசபை கூட்டத்தில் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.