பாடசாலை விடுமுறை முடியும் வரை பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

மட்டக்களப்பு - மண்முனை, தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் க.பொ.த. உயர்தரம் தவிர்ந்த ஏனைய அனைத்து தரங்களுக்கும் பாடசாலை விடுமுறை முடியும் வரை பிரத்தியேக வகுப்பு நடாத்துவதற்கு தடைவிதிப்பதற்கு பிரதேச சபை அமர்வின் ஊடாக தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மண்முனை, தென் எருவில் பற்று பிரதேச சபையின் பத்தாவது அமர்வு தவிசாளர் ஞ.யோகநாதன் தலைமையில் இன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது, எருவில் வட்டார பிரதேச சபை உறுப்பினர் எஸ்.கண்டீபனினால் குறித்த தீர்மானமானது முன்மொழியப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் குறித்த தீர்மானத்தை நிறைவேற்றும் பொருட்டு சபையின் அனுமதிக்காக விடப்பட்டது இதன் பிரகாரம் குறித்த தீர்மானமானது எந்தவித எதிர்ப்புமின்றி சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாடசாலையில் தொடர்ச்சியான கல்வியை கற்பதனூடாக மாணவர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்பதனை கருத்திற் கொண்டே கல்வி அமைச்சானது மாணவர்களுக்கு தவணைக்கு ஒருமுறை விடுமுறை வழங்குகின்றது.

ஆனால் மாணவர்கள் விடுமுறை காலங்களில் தங்களது ஓய்வுகளை சரியாக கழிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.

இதன் காரணம் விடுமுறை காலங்களிலேயே கூடுதலான பிரத்தியேக வகுப்புக்களை ஏற்பாடு செய்து நடாத்துகின்றனர்.

இதனால் மாணவர்கள் வீட்டில் உண்பதற்கு கூட நேரமின்றி இயந்திரம் போன்று செயற்படுகின்றனர்.

ஓய்வு என்பது ஒரு மனிதனுக்கு மிக முக்கியமான தேவைகளில் ஒன்றாகும். இது மாணவர்களுக்கு தடை பண்ணப்படுகின்றமையானது மாணவர்களிடையே உடல் மற்றும் உள ஆரோக்கியமற்ற நிலையை உருவாக்குவதாக அமைகின்றது. இவற்றினைக் கருத்திற் கொண்டே குறித்த தீர்மானமானது நிறைவேற்றப்பட்டதாக பிரதேச சபை உறுப்பினர் காண்டீபன் தெரிவித்துள்ளார்.

Latest Offers