மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி நினைவு தின நிகழ்வுகள்

Report Print Kumar in சமூகம்

14ஆவது ஆண்டு சுனாமி நினைவு தின நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தம் காரணமாக 2800இற்கும் மேற்பட்டவர்கள் காவுகொள்ளப்பட்ட நிலையில் இன்று அதன் 14ஆவது ஆண்டினை நினைவு கூறும் வகையில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

திருச்செந்தூர்

மட்டக்களப்பு - திருச்செந்தூர், கல்லடி டச்பார், நாவலடி, திருச்செந்தூர் சுனாமி ஞாபகார்த்த நினைவாலயம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 8.55 மணியளவில் சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் விசேட பூஜைகள் நடைபெற்று ஈகச்சுடர் ஏற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து உயிரிழந்தோரின் உறவுகளால் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,ஆணையாளர் க.சித்திரவேல், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இப்பகுதிகளில் சுனாமி அனர்த்தம் காரணமாக 1800க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருந்ததுடன் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்த நிலையில் பல கோடி ரூபா சொத்துகள் இழக்கப்பட்டன.

ஒந்தாச்சிமடம்

மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில் பற்று, ஒந்தாச்சிமடம் எனும் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத் தூபியில் சுனாமி நினைவு தின நிகழ்வு இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது கிராம மண்முனை தென் எருவில் பற்று பிரதேச தவிசாளர் ஞா.யோகநான், பிரதேசபை உறுப்பினர் சற்குணம், கிராம சேவை உத்தியோகத்தர்கள், உயிர் நீத்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

வாழைச்சேனை

மட்டக்களப்பு - வாழைச்சேனை, கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக மௌன அஞ்சலி இன்று செலுத்தப்பட்டது.

மிகவும் பாதுகாப்பான நாளை நோக்கி என்ற தொனிப்பொருளில் பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் இந் நினைவு தின நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு சுனாமிப் பேரலையால் உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

வாகரை

வாகரை பிரதேசசபை அலுவகத்தில் இன்று காலை 09.25 முதல் 09.27 வரை இறை வேண்டுதலுடன் சுனாமி நினைவு தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு வாகரை பிரதேச சபையின் தவிசாளர் சி.கோணலிங்கம் தலைமையில் சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றுள்ளது.

இதன் போது தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் இறந்தவர்களுக்கான நினைவு கூரலும் நிகழ்த்தப்பட்டது.

பாசிக்குடா கடற்கரை

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் சுனாமி அனர்த்தத்தினால் தமது இன்னுயிரை நீத்தவர்களை நினைவு கூறும் முகமாக நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

வாழைச்சேனை - பாசிக்குடா கடற்கரையில் இன்று காலை, பாசிக்குடா கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதன்போது கோறளைப்பற்று தவிசாளர் சோபா ஜெயரஞ்சித், கிராம சேவகர் க.கிருஷ்ணகாந் மற்றும் உயிர் நீத்தவர்களின் உறவுகள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

மேலதிக செய்திகள் - ருசாத், நவோஜ்

Latest Offers