நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ள விவசாயக் குடும்பங்கள்

Report Print Yathu in சமூகம்
நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ள விவசாயக் குடும்பங்கள்
54Shares

கிளிநொச்சி - முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புக்கள் காரணமாக சுமார் 36 ,239 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்கள் முற்றாக அழிவடைந்துள்ளதாக ஆரம்ப கட்டத்தகவல்களிலிருந்து தெரியவந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த மாவட்டங்களில் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பல்லாயிரக்கணக்கான வயல் நிலங்கள் கடந்த மூன்று நாட்களாக வெள்ளநீரில் மூழ்கிக்காணப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய நீர்ப்பாசனக்குளங்களான இரணைமடுக்குளம் மற்றும் கல்மடுக்குளம் ஆகியவற்றின் நீர்வரத்துக்கள் அதிகரித்து 14 வான்கதவுகளும் திறக்கப்பட்டும், கல்மடுக்குளம் 3 அடிக்கு மேல் வான் பாய்ந்ததனாலும் சுமார் 15 ,810 ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளதாக இரணைமடு விவசாய சம்மேளனத்தின் தலைவர் மு.சிவமோகன் இன்று தெரிவித்துள்ளார்.

மேலும் மகிழங்காடு, சின்னக்காடு மற்றும் பன்னங்கண்டி, மருதநகர், முரசுமோட்டை வட்டக்கச்சி, இராமநாதபுரம், ஊரியான், பெரியபரந்தன், குஞ்சுப்பரந்தன், கோரக்கன்கட்டு,பெரியகுளம், நாகேந்திரபுரம், புளியம்பொக்கணை, கண்டாவளை, ஆகிய பிரதேசங்களே இவ்வாறு வெள்ளநீரில் மூழ்கியுள்ளது.

குறித்த பிரதேசங்களில் மானாவாரியாக மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கைகளில் சுமார் 7, 700 ஏக்கர் வயல் நிலங்களும், நீர்ப்பாசனத்தின் கீழ் உள்ள சுமார் 8, 110 ஏக்கர் வயல் நிலங்களும் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளன.

இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டங்களில் ஆரம்பகட்டத்தகவல்களில் சிறிய நீர்ப்பாசனக் குளங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சுமார் 9, 679 ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கி அழிவடைந்துள்ளன. இந்நிலையில் ஐந்திற்கும் மேற்பட்ட சிறிய குளங்கள் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன.

மேலும் இரண்டு வருடங்கள் நிலவிய தொடர் வறட்சி காரணமாக சிறுபோக செய்கைகைகள் மேற்கொள்ளப்படாத நிலையில் , இம்முறை மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையானது அழிவடைந்தமையால் விவசாயக்குடும்பங்கள் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.