வட மாகாண ஆளுநரை சந்தித்த முன் பள்ளி ஆசிரியர்கள்!

Report Print Sumi in சமூகம்

வட மாகாணத்தில் படையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சிவில் பாதுகாப்பு பிரிவின் கீழ் ஊதியம் பெறும் முன் பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்தும் தம்மை இயங்க அனுமதிக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடமாகாண ஆளுநர் அலுவலத்தின் முன்பாக இன்று ஒன்று கூடி கவனயீர்ப்பில் ஈடுபட்ட முன்பள்ளி ஆசிரியர்கள், வடமாகாண ஆளுநரை சந்தித்து தமது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த சந்திப்பில்,

முன்பள்ளி ஆசிரியர்களாக சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி கடன்களைப் பெற்ற நிலையில். தற்போது திடீரென ஜனவரியுடன் இடைநிறுத்துமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் எமது குடும்ப நிலைமை கருதி தொடர்ந்தும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். ஏனெனில் வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் எம்மை பணிநீக்கம் செய்ய வேண்டாம். ஏனெனில் யாழ்ப்பாணத்தில் 13 முன்பள்ளி ஆசிரியர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 322 பேரும் பணியாற்றுவதோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் 173 பேரும் ஆசிரியர்களாக பணியாற்றுகின்றோம்.

இவ்வாறு பணியாற்றும் எமக்கு 32 ஆயிரம் சம்பளம் பெறும் நிலையில் அதனை நம்பியே கடனைப் பெற்றோம். எனவே எமக்கான பணியை தொடர்ந்தும் வழங்கி அதே சம்பளத்தை தொடர்ந்தும் வழங்க வேண்டும்.

கூட்டமைப்பினர் படையினரின் கீழ் இயங்கும் முன்பள்ளிகளை நிறுத்துமாறு கோருகின்றனர். அவ்வாறு நிறுத்துவதனை தடுக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளதுடன், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினை இயங்க அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முன்பள்ளி ஆசிரியர்களிடம் ஆளுநரிடம் என்ன விடயத்தை கோர வந்தீர்கள் தொடர்ந்தும் பணியாற்ற முடியாது என யார் தெரிவித்தது அதனை எதன் அடிப்படையில் கூறுகின்றீர்கள் எனக் கோரியபோது எதுவுமே தெரியாது எனப் பதிலளித்ததோடு தம்மை அழைத்து வந்த முன்பள்ளி இணைப்பாளர்களான ஆண் பணியாளர்களிடம் கோருமாறு தெரிவித்தனர்.

தொடர்ந்தும் குறித்த சந்திப்பில் ஆளுநரிடம் முன்பள்ளி ஆசிரியர்கள தமது கோரிக்கை மனு ஒன்றினை கையளித்திருந்தனர்.

இதேநேரம் ஜனாதிபதி தலமையில் இடம்பெற்ற வடக்கு, கிழக்கிற்கான அபிவிருத்திச் செயலணிக் கலந்துரையாடலில் வடக்கில் படைக் கட்டுமானத்தின் கீழ் இயங்கும் முன்பள்ளிகள் சர்வதேசத்திற்கு தவறான செய்தியையும் வடக்கு மாகாண முன்பள்ளி நியதிச் சட்டத்தை மீறுவதாகவும் உள்ளதனால் அவற்றினை கல்வித் திணைக்களத்திடம் ஒப்படைத்தே ஆக வேண்டும் என்ற கோரிக்கையினை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்வைத்துள்ளனர்.

எனவே, அவர்களிடம் தான் நீங்கள் கேட்ட வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளார்.