டெங்கு நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட உயர்மட்ட கூட்டம்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட உயர்மட்ட கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கின் தாக்கம் குறைந்துவரும் நிலையிலும் திண்மக்கழிவு நிலையங்கள் தொடர்ந்தும் டெங்கிற்கு ஆபத்தான நிலையினை ஏற்படுத்திவருவதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உதயகுமார் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த ஆண்டு இலங்கையில் டெங்கு தாக்கத்திற்கு உள்ளான மாவட்டங்களில் மூன்றாவது இடத்தினை மட்டக்களப்பு மாவட்டம் கொண்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு டெங்கின் தாக்கம் காரணமாக 4,751 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டதுடன் ஏழு பேர் டெங்கினால் உயிரிழந்துள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கின் தாக்கம் காரணமாக கூடுதலாக பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் 1800க்கும் மேற்பட்ட மாணவர்கள் டெங்கினால் பாதிக்ப்பட்டதுடன் வேலைகளுக்கு செல்வோரும் அதிகளவில் இந்த டெங்கின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டதாகவும் இங்கு வைத்திய அதிகாரி டாக்டர் ரி.தர்சினியினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக டெங்கின் தாக்கம் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையங்கள் சரியான முறையில் முகாமைத்துவம் செய்யப்படாத காரணத்தினால் அது பாரிய அச்சுறுத்தலாக மாறிவருவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சரியான முறையில் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையங்கள் பராமரிக்கப்படாத காரணத்தினால் அங்கு பாரியளவில் டெங்கு நுளம்புகள் பெரும் அபாயம் காணப்படுவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்போது திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையங்களை சரியான முறையில் பராமரித்து அவற்றின் செயற்பாடுகளை வினைத்திறன் மிக்கதாக மாற்றுவது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

அத்துடன் கல்வித்திணைக்களங்கள் பாடசாலைகளில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது தொடர்பிலான கருத்துரைகளும் இதன்போது வழங்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கிறேஸி, மாவட்ட டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பொறுப்பு வைத்தியர் டாக்டர் தர்சினி உட்பட திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், பிரதேசசபை செயலாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.