நிவாரண பொருட்களை வழங்க விடாது தடுத்த நபர்கள் மீண்டும் விளக்கமறியலில்!

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை தடுத்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட இரண்டு பேரையும் மீண்டும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த குடும்பங்களுக்கான நிவாரண உதவிகளை தடுத்தல் மற்றும் அரச அதிகாரிகளை தகாத வார்த்தையில் பேசி அரச வாகனங்களை தடுத்து நிறுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு சேவைகளை வழங்கும் பொருட்டு கண்டாவளை மகாவித்தியாலயத்தில் அமைந்துள்ள நலன்புரி நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உதவிப்பொருட்களை வழங்கச் சென்ற பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச உத்தியோகத்தர்களை பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட நான்கு பேர் நிவாரண பொருட்களை வழங்க விடாது தடுத்துள்ளனர்.

தொடர்ந்தும் அரச உத்தியோகத்தர்கள் மீது தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளதுடன், அவர்களது பணிகளுக்கு இடையூறு விளைவித்து அவர்கள் பயணித்த இரண்டு வாகனங்களையும் தடுத்து நிறுத்தியமை தொடர்பில் கடந்த திங்கட்கிழமை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய கடந்த செவ்வாய் கிழமை சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புபட்ட கரைச்சிப்பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட இரண்டு பேரை கைது செய்து கடந்த 26ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர்.

B 1747 / 18 என்ற வழக்கின் பிரகாரம் இரண்டு சந்தேக நபர்களையும் நேற்றையதினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பேரையும் நேற்று பகல் மீண்டும் பதில் நீதவான் எஸ்.பாலசுப்ரமணியம் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து குறித்த இருவரையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.