வவுனியா நகரில் ஆறு கடைகளில் தொடர் திருட்டு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா நகரப் பகுதியில் உள்ள மொத்த மரக்கறி விற்பனை நிலையத்தில் அமைந்துள்ள 6 வியாபார நிலையங்களில் தொடர் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு 8 - 9.30 மணிக்கிடையில் இந்த தொடர் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, இலுப்பையடி பகுதியில் அமைந்துள்ள மொத்த மரக்கறி விற்பனை நிலையத் தொகுதிக்குள் அமைந்துள்ள 6 கடைகளின் கூரைகளைப் பிரித்து உள் நுழைந்த திருடர்கள் அங்கு உள்ள காசுப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த பணங்களைத் திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சீசீடீவி கமரா பொருத்தப்பட்டிருந்த கடைகளில் நுழைந்த திருடர்கள் அவற்றை செயிழக்கச் செய்த பின் திருட்டு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த தொகுதியில் 35 வர்த்தக நிலையங்கள் தொடர்ச்சியாக அமைந்துள்ள நிலையில் பிற்பகல் 7 மணியளவில் பூட்டப்பட்ட வர்த்தக நிலையங்களின் கூரைகளே பிரிக்கப்பட்டு திருடர்கள் உள்நுழைந்துள்ளனர்.

இத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்ற போது அத்தொகுதியில் உள்ள சில கடைகள் திறந்து காணப்பட்டுள்ளது.

குறித்த கடைகளில் இருந்தவர்கள் கடைகள் உடைக்கப்பட்டதை அவதானித்து கடை உரிமையாளருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவர்கள் இது தொடர்பாக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்தனர்.

முறைப்பாட்டையடுத்து சீசீடீவி கமராக்களின் உதவியுடன் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இக் கடைகளில் இருந்த சுமார் 60 ஆயிரம் ரூபாய் வரையிலான பணமே இவ்வாறு திருடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers