வவுனியாவில் வாகனத் தரிப்பிடத்தில் போலி பற்றுச்சீட்டு விநியோகம்

Report Print Theesan in சமூகம்
105Shares

வவுனியா வர்த்தகர் நலன்புரிச்சங்கத்தின் பெயரில் வாகனத் தரிப்பிட குத்தகையாளர் என்ற பெயரில் விநியோகம் செய்யப்பட்ட வாகனத்தரிப்பிடத்தின் பற்றுச்சீட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு எதிராக நகரசபையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகரசபையினருக்குச் சொந்தமான நகரப்பகுதிகளிலுள்ள வாகனத்தரிப்பிடத்தினை கேள்வி கோரல் மூலம் பெற்றுக்கொண்ட ஒப்பந்ததாரர் ஒருவர் அதனை வர்த்தகர் நலன்புரிச்சங்கத்தின் பெயரில் மாற்றி பற்றுச்சீட்டு அச்சடிக்கப்பட்டு இன்று முதல் வாகனத்தரிப்பிடத்தில் வைத்து வாகனங்கள் நிறுத்துவோருக்கு போலி பற்றுச்சீட்டு விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து பொதுமகன் ஒருவரினால் இன்று மதியம் நகரசபைத்தலைவரின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் நகரசபை அதிகாரிகள் குறித்த வாகனத்தரிப்பிடத்தின் குத்தகையைப் பெற்றுக்கொண்ட நபருடன் தொடர்புகொண்டு உங்களது பெயரில் பெற்றுக்கொள்ளப்பட்ட வாகனத்திப்பிட குத்தகையை நலன்புரிச்சங்கத்தின் பெயரில் பற்றுச்சீட்டு அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளதை உடனடியாக தடை செய்யுமாறும் குத்தகைக்காரரின் பெயரில் பற்றுச்சீட்டினை அச்சடித்து வாகனத்தரிப்பிடத்தில் வைத்து விநியோகம் மேற்கொள்ளுமாறு குத்தகைதாரருக்கு பணிக்கப்பட்டுள்ளது.

குறித்த குத்தகைதாரர் வர்த்தகர் நலன்புரிச்சங்கம் பதிவு செய்யப்படவில்லை இதனாலேயே அதன் உறுப்பினரான எனது பெயரில் கேள்வி கோரல் மூலம் வாகனத்தரிப்பிடம் பெற்றுக்கொள்ளப்படடுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

எனினும் வர்த்தகர் நலன்புரிச்சங்கத்தின் பெயரைத் தொடர்ந்து பாவித்து வாகனத்தரிப்பிடத்திற்கான பற்றுச்சீட்டு விநியோகம் மேற்கொள்வதற்கு நகரசபையினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று முதல் வாகனத்தரிப்பிடத்தில் வாகனங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ள வர்த்தகர் நலன்புரிச்சங்கத்தின் பெயர் பொறிக்கப்பட்ட பற்றுச்சீட்டுக்கள் அனைத்தையும் மீளப் பெற்றுக்கொண்டு புதிய பற்றுச்சீட்டு அச்சடிக்கப்பட்டு விநியோகம் மேற்கொள்வதாக நகரசபையினருக்கு குத்தகைதாரரால் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன் தெரிவித்துள்ளார்.