கடந்தாண்டில் தமிழருக்கு தீர்வுமில்லை, சொந்த நிலமுமில்லை! தவிசாளர் ஜெயசிறில் கவலை

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

இலங்கையில் தமிழ் மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த நிரந்தர தீர்வு வழமைபோல கடந்த ஆண்டிலும் கிடைக்கவில்லை.

கடைசியில் சொந்த நிலமாவது கிடைக்குமென்று எதிர்பார்த்திருந்த உங்களுக்கு அதுவும் கிடைக்கவில்லை. மொத்தத்தில் ஏமாற்றத்திலேயே தமிழ்மக்களின் போராட்டம் நகர்கிறது.

இவ்வாறு பூர்வீகமாக தாம் வாழ்ந்து வந்த காணியைக்கோரி கடந்த 140 நாட்களாக அமைதி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொத்துவில் ஊறணி தமிழ்மக்களைச் சந்தித்து இன்று உரையாடிய காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் கவலை தெரிவித்துள்ளார்.

ஐந்தாவது தடவையாக அங்கு விஜயம் செய்து அந்த மக்களுடன் கலந்துரையாடிய தவிசாளர் கூறுகையில், 140 நாட்களை கடந்தும் உங்கள் போராட்டத்தின் வேட்கை தாகம் குறையாதது கண்டு வியக்கிறேன்.

எனினும் இதுவரை உங்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாதது கண்டு கவலையடைகின்றேன்.

வடக்கு, கிழக்கில் இராணுவம் நிலைகொண்டிருந்த தமிழ்மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுவருகின்ற இந்தக்காலகட்டத்தில் மக்களிருந்த சொந்தக்காணிகள் இன்னும் விடுவிக்கப்படாதது வேதனைக்குரியது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உங்களை தைப்பொங்கலுக்கு முன்னராவது மீளக்குடியமர்த்தும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கூறுகையில்,

அரச அதிபர் உறுதிமொழி வழங்கியிருக்கிறார். எமக்கு எமது சொந்தக்காணி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும்.

தமிழ் அரசியல் தலைமைகள் வடக்கிற்கு கொடுக்கும் முன்னுரிமையை கிழக்கிற்கு குறிப்பாக எமக்கு வழங்காதது வேதனைக்குரியது. உங்களை போன்ற ஒருசிலர்தான் எம்மை நினைத்துப்பார்க்கிறார்கள். உதவுகிறார்கள்.

எதையெடுத்தாலும் போராடித்தான் பெறவேண்டிய துர்ப்பாக்கிய நிலை அம்பாறை மாவட்ட தமிழர்க்கு ஏற்பட்டுள்ளது. அதற்காக நாம் போராடிப்பழகி விட்டோம். எனவே எமது பூர்வீககாணி கிடைக்கும் வரை போராடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Latest Offers