பொது மக்களின் வரிப் பணத்திலிருந்தே நாம் சம்பளம் பெறுகின்றோம் என்பதை மறந்துவிட கூடாது!

Report Print Rusath in சமூகம்

பொது மக்களின் வரிப் பணத்திலிருந்தே சம்பளம் பெறுவதால் அரச ஊழியர்கள் மக்களின் சேவைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ். சுதாகர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அரச சேவை சத்தியப் பிரமாண உறுதிமொழி பெறும் நிகழ்வின் போது, கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை, வவுணதீவு பிரதேசம் என்பது வருமானம் குறைந்த, வறுமைக் கோட்டின்கீழ் வாழும் மக்கள் உள்ள பிரதேசமாகும்.

இவ்வாறான மக்கள் மத்தியில் நாம் அம்மக்களுக்காக கடமையாற்ற பணிக்கப்பட்டது என்பது பெரும் பாக்கியமாகும். இவ்வாறு வறுமையான மக்களுக்கு சேவையாற்றும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

அது எமக்கு கிடைத்திருக்கின்றது. இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மக்களின் உணர்வுகளை மதித்து, நடுநிலையாக இன மத பாகுபாடின்றி சேவை செய்ய வேண்டும்.

இதேபோல், மக்களிடையே ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டிய சமாதான நடுவர்களாக அரசாங்க உத்தியோகத்தர்கள் இருக்கவேண்டும். இவ்வாறாக செயற்படுவோருக்கு அந்த சமூகத்தில் நற்பெயரும், மரியாதையும் தானாகவே கிடைத்துவிடுகின்றது.

நாம் கடந்த ஆண்டுகளில் திருப்தியாக செய்ய முடியாமல் போன அலுவலக காரியங்களையும், மக்களுக்கான சேவையினையும் பிறந்திருக்கும் இந்தப் புதிய ஆண்டில் சரிவர திருப்திகரமாக செய்து முடிக்க முயற்சிக்க வேண்டும். எமக்கெல்லாம் பொது மக்களின் வரிப் பணத்திலிருந்தே சம்பளம் கிடைக்கின்றது என்பதை நாம் மறந்துவிட முடியாது என தெரிவித்துள்ளார்.

Latest Offers