யாழ். சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் இருந்து அதிரடிப்படையினரால் வெடிமருந்து மீட்பு

Report Print Sumi in சமூகம்

யாழ். சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் இருந்து சி 4 வெடிமருந்து 1 கிலோ மற்றும் டெனேட்டர் 4 ஆகியன விசேட அதிரடிப் படையினரால் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளன.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, யாழ். கொழும்புத்துறை பகுதியில் உள்ள சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் இருந்து குறித்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

1 கிலோ நிறையுடைய சி 4 வெடிமருந்து 7 பைக்கட்களாக பொதி செய்யப்பட்ட நிலையிலும், டெனேட்டர் என அழைக்கப்படும் வெடி மருந்திற்குப் பயன்படுத்தப்படும் 4 குழாய்களும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

அப்பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்கக் கொண்டு செல்வதற்காக பேருந்து தரிப்பிடத்தில் இவற்றை வைத்திருக்கலாம் என்று விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மீட்கப்பட்ட வெடி பொருட்கள் அனைத்தும் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வெடிபொருட்களை யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கடந்த மாதமும் இவ்வாறு இந்த பேருந்து தரிப்பிடத்தில் இருந்து ஒரு தொகை வெடிமருந்துகள் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.