சட்டவிரோதமாக இயங்கிய மணற்குடியிருப்பு மதுபானசாலை மூடப்பட்டுள்ளது

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்பட்ட மணற்குடியிருப்பு மதுபானசாலை நேற்று முதல் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சட்டத்திற்கு முரணான வகையில் இயங்கி வந்த குறித்த மதுபானசாலைக்கு எதிராக மக்கள் மற்றும் மக்கள் சார்பாளர்கள் தொடர்ச்சியான எதிர்ப்பினை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த மதுபானசாலை மூடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

குறித்த மதுபானசாலை, 2016.01.24 ஆம் திகதியன்று திறக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த மதுபானசாலை திறக்கப்பட்டமையால், 21 வயதிற்கும் குறைந்த இளையவர்கள் மதுப்பழக்கத்திற்கு ஆளாவதாகவும், பொது இடங்களுக்கு அருகாமையில் மதுபானசாலை அமைந்துள்ளதால், பலத்த இடர்பாடுகளுக்கும் தாம் முகங்கொடுப்பதாகவும், அப்பகுதியிலுள்ள பொதுமக்களும், பொது அமைப்புகளும் என்னிடம் தெரியப்படுத்தியிருந்தனர்.

மேலும் இந்நிலைமை தொடர்பாக ஆராயும்போது, மதுபானசாலை அமைக்கப்பட்ட பகுதியில் ஏற்கனவே, பதிவுசெய்யப்பட்ட கோவில்கள், கல்வி நிலையங்கள், சிறுவர் பூங்கா போன்ற பொது இடங்கள் அமைந்திருந்தன.

எனவே மதுவரிச்சட்டத்தின் 52ஆம் இலக்க எச்.எல் விதிகளை மீறும்வகையலேயே இந்த மதுபானசாலை அமைந்திருந்தது.

இது தவிர மதுபானசாலை திறக்கப்பட்டதால் சிறுவர்கள் பலரும் மதுவிற்கு அடிமையாகும் அபாயமும் ஏற்பட்டிருந்தது.

இது 2006ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபைச் சட்டம், 31ஆவதில் 1ஆவது சரத்தின்படி, 21 வயதிற்கு குறைவான எவருக்கும் மதுப் பொருட்களை விற்றலோ, விற்பனைக்கு முனைதலோ, மேம்படுத்தலோ ஆகாது என்று குறிப்பிடப்பட்டிருப்பதை மீறுவதாக இருந்தது.

ஆகவே குறித்த மதுபானசாலை முற்றுமுழுதாக சட்டத்திற்கு முரணான வகையிலேயே இயங்கிக்கொண்டிருந்தது.

சம்பந்தப்பட்டவர்களுக்கு இது தொடர்பான விடயங்களைத் தெரியப்படுத்தியதன் விளைவாக, முல்லைத்தீவு மாவட்ட செயலக ஊழியரால், மதுபானசாலை நிறுத்தப்பட்டதென வீட்டிற்கு வந்து கடிதம் தரப்பட்டது.

இந்நிலையில் 2016.02.05 இரவு தடையை மீறி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து, மக்கள் மற்றும் பொது அமைப்புகள் ஒன்றிணைந்து இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.

தொடர்ச்சியாக 31.01.2017 இடம்பெற்ற வடமாகாணசபையின் 83ஆவது அமர்வில் இது தொடர்பில் பிரேரணை ஒன்றும் என்னால் முன்மொழியப்பட்டது. இருந்தும் இப்பிரச்சினைக்கு தீர்வுகள் ஏதும் கிடைக்கவில்லை.

மேலும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கணைப்புக்குழுக் கூட்டம், மற்றும் கரைதுறைப்பற்றுப் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் தொடர்ந்தும் என்னால் அழுத்தங்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் கரைதுறைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டமொன்றில் விவாதிக்கப்பட்டு, பிரதேச செயலாளரால் இது தொடர்பில் ஆராய குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில், மணற்குடியிருப்பில் சட்டத்திற்கு முராணான வகையில் அமைந்துள்ள இந்த மதுபானசாலை அகற்றப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்த நிலையில், மதுவரித் திணைக்களத்தினர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுமதியை இரத்துச்செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது.

கரைதுறைப்பற்று உதவி பிரதேச செயலாளர் இ.பிரதாபன் இன்று தொடர்புகொண்டு மதுபானசாலை மூடப்பட்டதென்ற செய்தி உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும் சட்டத்திற்கு முரணான வகையில் இயங்கிய மதுபானசாலை அகற்றப்பட்டு, அப்பகுதி மக்களின் இடர்பாடுகளுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதையிட்டு மகிழ்வடைகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.