மட்டக்களப்பு - ஆரையம்பதி நகரினை வலம் வரும் வரலாற்று சிறப்புமிக்க தலைவர்கள்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட ஆரையம்பதி பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள சிலைகள் அழகுபடுத்தப்பட்டு மீண்டும் இன்று மக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளன.

ஆரையம்பதி பிரதான வீதியை அழகுபடுத்தும் வகையில் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் நடு பக்கமாக இந்த சிலைகள் 2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தனின் சொந்த நிதியில் அமைக்கப்பட்டிருந்தன.

அவற்றினை மீண்டும் மக்களின் பார்வைக்காக வழங்கும் நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம் தலைமையில் நடைபெற்றுள்ளது.

விவேகானந்தர், பாரதியார், உலகநாச்சியார், இராவணன் மற்றும் எல்லாள மன்னன் உட்பட பல்வேறு வரலாற்று சிறப்புமிக்கவர்களின் சிலைகள் இவ்வாறு அமைக்கப்பட்டிருந்தன.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைவாக மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம் அதற்கான நிதியினை பிரதேசசபை ஊடாக ஒதுக்கீடுசெய்து குறித்த சிலைகள் வர்ணம் தீட்டப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தி,பிரதேசசபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன், பிரதேச செயலக, பிரதேசசபை உத்தியோகத்தர்கள், மண்முனைப்பற்று பிரதேசசபையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

எனினும் இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தவிர்ந்த ஏனைய பிரதேசசபை உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.