பொலிஸ் காவலரண் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை, மூதூர் பகுதியில் பொலிஸ் காவலரண் சேதமாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐந்து சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஐவரையும் இன்றையதினம் மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூதூர், பெரியபாலம் பகுதியில் டிப்பர் வாகனத்தில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து பொலிஸாருக்கு பொதுமக்களுக்குமிடையில் ஏற்பட்ட முறுகலினால் திரிசீடி சந்தியில் இருந்த பொலிஸ் காவலரண் சேதமாக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டதுடன், சந்தேகநபர்களில் ஒருவர் மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூதூர், பெரியபாலம் பகுதியில் வைத்து டிசம்பர் 10ஆம் திகதி மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த நபர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.மஹ்சூம் (29) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸாருக்கும், பொதுமக்களுக்குமிடையில் மோதல் ஏற்பட்டதோடு பொலிஸ் காவலரணும் சேதமாக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் புலானாய்வுத் துறையினர் மேற்கொண்ட விசாரணையின் பேரில் குறித்த கலகத்திற்கு முன்னின்று செயற்பட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மேற்படி சந்தேக நபர்கள் ஐவரையும் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.