என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு பொய் குற்றச்சாட்டு - ஐ.ரீ.அஸ்மி

Report Print Navoj in சமூகம்

என் மீதும் நான் சார்ந்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களால் மேற்கொள்ளப்படும் குற்றச்சாட்டு பொய் குற்றச்சாட்டே தவிர அதில் எந்தவித உண்மையும் இல்லை என ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தெரிவித்துள்ளார்.

ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதேச சபை தவிசாளர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக 27.12.2018 அன்று ஊடகங்களிலும் ,இணையதளங்களிலும் செய்தி வெளியாகி இருந்த போதும் இந்த குற்றச்சாட்டோடு தொடர்புடைய சபை உறுப்பினரான எம்.எம்.ஹனீபா என்பவர் வெளிநாட்டுக்கு தனிப்பட்ட பயணம் ஒன்று மேற்கொண்டிருந்ததால் அவரது வருகையின் பின்னரே நடத்த வேண்டிய நிலையிருந்தது.

சபையின் உறுப்பினர் ஒருவர் சபை அமர்வுகளுக்கு தொடர்ந்து மூன்று கூட்டங்களுக்கு வருகை தராத பட்சத்தில் சபையின் செயலாளரினால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் அதனை விடுத்து குறித்த சபை உறுப்பினர் சபைக்கு வருகை தராதபோது அவரது கையொப்பத்தையிட்டு சம்பளத்தை பெற்றுக்கொண்டது என்பது உண்மைக்கு புறம்பானது.

குறித்த சபை ஆரம்பிக்கப்பட்டு ஒன்பது அமர்வுகள் இடம்பெற்றுள்ளது அதில் சபை உறுப்பினர் வரவு புத்தகத்தில் ஏழு கூட்டத்திற்கு வருகை தந்துள்ளதாக கையொப்பம் இட்டுள்ளார். இரண்டு கூட்டங்களுக்கு வருகை தரவில்லை அதற்கான கொடுப்பணவு வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதன் போது சபை உறுப்பினர் எம்.எம்.ஹனீபா கருத்து தெரிவிக்கையில்,

ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பான சுயேட்சை குழுவில் நான் போட்டியிட்டேன் நான் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச அமைப்பாளர் இப் பிரதேசத்தை சேர்ந்த இராஜாங்க அமைச்சர் அமீர் அலிக்கும் எனக்கும் பிரதேச சபை தேர்தலில் வேட்பாளர்களை நியமிப்பதில் ஏற்பட்ட கருத்து மோதலினால் சுயேட்சையாக போட்டியிட்டேன். நான் முஸ்லீம் காங்கிரஸ் அங்கத்தவர் அல்ல ,நான் ஐக்கியதேசிய கட்சியின் ஆதரவாளரும் ,அக்கட்சியின் பிரதேச அமைப்பாளருமாகும்.

பிரதேச சபையின் இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தினை தோற்கடிக்குமாறு முஸ்லீம் காங்கிரஸ் சார்பான சுயேட்சை குழு உறுப்பினர்கள் என்னிடம் வந்து கருத்து தெரிவித்தார்கள்.

ஓட்டமாவடி பிரதேச சபை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சபையாக இருப்பதால் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டு கட்சியாக அதனை என்னால் செய்யமுடியாது என்று தெரிவித்தமைக்கான காரணத்திற்காகவே என் மீது அபாண்டமான குற்றச்சாட்டினை தெரிவிக்கின்றனர்.

நான் சபை அமர்வு ஒன்பதில், ஏழு அமர்வுக்கு வருகை தந்துள்ளேன் சில அமர்வுகள் முடிவடைவதற்கு முதல் வரவு புத்தகத்தில் ஒப்பமிட்டு தவிசாளரிடமும், செயலாளரிடமும் எனது தேவையின் நிமித்தம் வெளியே சென்று இருக்கின்றேன்.

எனது கொடுப்பணவை தவிசாளர் பெற்றிருந்தால் நான் தான் அவர் மீது குற்றம் சொல்ல வேண்டும். கொடுப்பணவை நானே பெற்றுக் கொண்டுள்ளேன் என்று சொல்லும் போது தவிசாளர் போலி ஒப்பமிட்டு சம்பளத்தை பெற்றார் என்று கூற முடியும்.

முஸ்லீம் காங்கிரஸ் சார்பான சுயேட்சை குழு உறுப்பினர் அஸீசுல் றஹீம் என்ற உறுப்பினர் தாக்கப்பட்டதற்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனது ஆதரவாளர்கள் தாக்கினார்கள் என்ற குற்றசாட்டை நான் முற்றுமுழுதாக எதிர்க்கின்றேன் இக்குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என்றும் தெரிவித்துள்ளார்.