ஜனாதிபதி கொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்த நாமல் குமார என்பவர், இராணுவம் மற்றும் கடற்படையில் இணைந்து அவற்றில் இருந்து தப்பிச் சென்ற நபர் குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நாமல் குமார இராணுவம் மற்றும் கடற்படையில் இணைந்து கொள்ளும் போது வழங்கிய சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்தமைக்கான சான்றிதழில் 7 பாடங்களில் சித்தியடைந்துள்ளதாக கூறப்பட்டிருந்தாலும் அவர் உண்மையில் மூன்று பாடங்களில் மாத்திரமே சித்தியடைந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலைகள் சம்பந்தமான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
போலி சான்றிதழ் வழங்கியமை , இராணுவம் மற்றும் கடற்படையில் இணைந்த பின்னர் தப்பிச் சென்றமை குறித்து விசாரணைகளை நடத்தி வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பாக ஊடகங்களிடம் நாமல் குமார வெளியிட்ட தகவலால் நாட்டில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.