தமிழ் மண்ணை இறுதிவரையில் நேசித்த அமெரிக்க துறவியின் உடலம் மட்டக்களப்பு மண்ணில் நல்லடக்கம்

Report Print Dias Dias in சமூகம்

மட்டக்களப்பு மண்ணின் மீது தீராத பற்று கொண்ட புனித மைக்கேல் கல்லூரியின் இறுதி மிசனரி அதிபராக இருந்த அருட்தந்தை பெஞ்சமின் ஹரி மிலரின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் இருந்து வந்த அமெரிக்காவினை சேர்ந்த இறுதி ஜேசுசபை துறவி நேற்று காலை காலமானார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றியதில் ஜேசுசபை மிசனரிகளின் பங்களிப்பு என்பது பொன் எழுத்துக்களினால் பொறிக்கப்படவேண்டியவையாகும்.

அந்தவகையில், மட்டக்களப்பின் கல்வியின் தூண் என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியானது ஆரம்பிக்கப்பட்டு இந்த ஆண்டு 145ஆண்டினை தொட்டுள்ளது.

இந்த பாடசாலையினை அமெரிக்க ஜேசுசபை மிசனரிகளே ஆரம்பித்து கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துவந்தனர்.

இந்த நிலையில் குறித்த பாடசாலை அரசாங்கம் பொறுப்பேற்ற நிலையில் அந்த பாடசாலையின் இறுதி அதிபராகவும், மேலாளராகவும் அருட்தந்தை பெஞ்சமின் ஹரி மிலர் இருந்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவினை சேர்ந்தவராக இருந்தபோதிலும் யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான முன்னெடுக்கப்பட்டுவந்த மனித உரிமை மீறல்களை உரத்துக்குரல் கொடுத்த ஒருவராகவும் இருந்துள்ளார்.

மட்டக்களப்பு மண்ணை இறுதிவரையில் நேசித்த அருட்தந்தை பெஞ்சமின் ஹரி மிலரின் இறப்பு மாவட்டத்தின் கல்விச்சமூகத்தினை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.