படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவு தினம் இன்று திருகோணமலையில் அனுஷ்டிப்பு!

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலையில் 2006 ஜனவரி 02ஆம் திகதி கடற்கரையில் ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட நாளாக இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்கள் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாணவர்கள் அனைவரும் தமது உயர்தர பரீட்சையை முடித்து விட்டு பல்கலைக்கழக நுழைவு அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கைக் காவல்துறையினரும், அரசாங்கமும் இச்சம்பவத்தை ஆரம்பத்தில் மறுத்திருந்தாலும், பின்னர் இவர்கள் அனைவரும் விடுதலைப் புலி தீவிரவாதிகள் என்றும், அரசுப் படைகள் மீது கிரனைட்டு கொண்டு தாக்க முற்பட்ட வேளையில் கிரனைட்டு வெடித்து இவர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

மனோகரன் ரஜீகர் (பி. 22.09.1985, அகவை 21), யோகராஜா ஹேமச்சந்திரா (பி. 04.03.1985, அகவை 21), லோகிதராஜா ரோகன் (பி. 07.04.1985, அகவை 21), தங்கதுரை சிவானந்தா (பி. 06.04.1985, அகவை 21), சண்முகராஜா கஜேந்திரன் (பி. 16.09.1985, அகவை 21) ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இறந்த மாணவர்களின் உடல்களைப் பரிசோதித்த சட்ட வைத்திய நிபுணர் ஆய்வாளர், இறந்த மாணவர்களின் உடல்களில் துப்பாக்கிச் சூடுகள் காணப்பட்டதாகவும், இவர்கள் மிகக்கிட்டிய தூரத்தில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்ற விசாரணைகள் இதுவரை முடியாத போதும், யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு இம்மாணவர்களின் படுகொலைகளுக்கு உள்ளூர் காவல்துறை அதிகாரி ஒருவரே முக்கிய காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளது.

அத்துடன் இறந்த மாணவர் ஒருவரின் தந்தை மருத்துவர் தமது சாட்சியத்தைப் பதிவதற்கு எதிராக இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் அச்சுறுத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

பிள்ளைகளை பறிகொடுத்து நீதியும் கிடைக்காத நிலையில், அந்த ஐந்து மாணவர்களினது பெற்றோரும் நாட்டை விட்டே வெளியேறியுள்ளனர்.

எனினும் கொல்லப்பட்ட மாணவர் ஒருவரின் தந்தையான வைத்தியர் மனோகரன், சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் துணையுடன், நீதிக்காக தொடர்ந்து போராடி வரும் நிலையில், திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனாலும் இப்படுகொலைகள் குறித்த அதிகாரபூர்வ விசாரணைகள் நடைபெறுவதாக அவ்வப்போது கண் துடைப்புகள் நடந்து வந்த போதிலும் இந்த மாணவர்கள் படுகொலைக்கு இன்றளவும் நீதி கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.